“பிளாஸ்ட்” விமர்சனம்

“பிளாஸ்ட்” சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ரவி பஸ்ரூர். இந்த படத்தில் அர்ஜுன் சர்ஜா, ப்ரீத்தி முகுந்தன், அபிராமி கோபிகுமார், ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், பவன் கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கராத்தே கலைஞராகவும் பயிற்சியாளராகவும் வாழ்ந்து வரும் அர்ஜுன், தனது மனைவி அபிராமி மற்றும் மகள் ப்ரீத்தி முகுந்தனுடன் அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். தற்காப்புக்காக மட்டுமல்லாமல், அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும் கராத்தே பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து வருகிறார்.

அர்ஜுனின் தம்பியான விவேக் பிரசன்னா, ஒரு மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இதற்கிடையில், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்கும் வில்லனின் தம்பி, குண்டடிபட்ட நிலையில் மருந்து வாங்க தனது அடியாளை அந்த மெடிக்கல் ஷாப்புக்கு அனுப்புகிறார். அந்த ஒரு சம்பவமே அர்ஜுன் குடும்பத்திற்கும் வில்லன் கும்பலுக்கும் இடையிலான மோதலுக்கு காரணமாகிறது.

அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் குடும்பத்தை காப்பாற்ற அர்ஜுன் எடுக்கும் முடிவுகள் ஆகியவை விறுவிறுப்பான திரைக்கதையாக நகர்கிறது. இந்த பிரச்சனை எப்படி ஆரம்பமானது? இவர்களுக்குள் என்ன தொடர்பு?” என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் “பிளாஸ்ட்” படத்தின் மீதி கதை

இந்த படத்தின் மூலம் “ஆக்சன் கிங்” அர்ஜுனின் மாஸ் கம்பேக் என சொல்லலாம். சமீப காலங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகமாக தோன்றிய அவர், இந்த படத்தில் மீண்டும் ஹீரோயிசத்துடன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக, ஆக்சன் மட்டுமல்லாமல் குடும்ப உணர்வுகளும் கலந்த கதாபாத்திரத்தில் தனது அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் சமமான முக்கியத்துவத்துடன் ஆக்சன் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது படத்தின் பெரிய பலமாக உள்ளது. திரையில் இவர்களின் ஸ்டைலான சண்டைக் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. அழகும் அதிரடியும் இணைந்த இவர்களின் திரை தோற்றம் படத்திற்கு கூடுதல் வலிமையை கொடுக்கிறது.

விவேக் பிரசன்னா தம்பி கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். வில்லனாக வரும் ஜான் கொக்கேன் தனது கம்பீரமான நடிப்பால் கவனம் ஈர்க்க, அடியாளாக நடித்துள்ள வினோத் சாகர் மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திலீபனும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்துவமான இடத்தை கொடுத்து, அனைத்து நடிகர்களையும் நினைவில் நிற்கும் வகையில் இயக்குநர் கையாண்டிருக்கிறார்.

அதேபோல், அர்ஜுன் சிதம்பரம், பாலா ஹாசன், பவண் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். சரியான நடிகர் தேர்வு மற்றும் அவர்களிடமிருந்து திறமையான நடிப்பை வெளிக்கொணர்ந்த விதம் இயக்குநரின் பலமாக தெரிகிறது.

தொழில்நுட்ப அம்சங்களில், ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா காட்சிகளுக்கு தரமான தோற்றத்தை வழங்கியுள்ளது. பிரதீப் ஈ ராகவ்வின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்தை சரியாக தக்க வைத்திருக்கிறது.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் ஆக்சன் காட்சிகளை இன்னும் மிரட்டலாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது இசை திரையரங்க அனுபவத்தை அதிகரிக்கிறது.

மேலும், சண்டைப் பயிற்சியாளர் பீனிக்ஸ் பிரபுவின் பணியை தனியாக பாராட்ட வேண்டியது அவசியம். படம் முழுவதும் ஆக்சன் காட்சிகள் இருந்தாலும், எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாமல் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக பெண்கள் ஈடுபடும் சண்டைக் காட்சிகளையும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருப்பது அவரது திறமையை வெளிப்படுத்துகிறது

.

“பிளாஸ்ட்” படத்திற்கு மதிப்பீடு 4/5

ரசிகர்களை கவரும் கமர்ஷியல் எண்டர்டெய்னர்