உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லெஜெண்ட் சரவணனின் “லீடர்” திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்று, இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.
இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பரபரப்பான ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக, லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பாராட்டைப் பெற்றது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய “லீடர்” திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் மே 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் “லீடர்” திரைப்படம் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் பெற்ற வரவேற்பைப் போலவே, ஓடிடியிலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையை படக்குழு தெரிவித்துள்ளது.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், தனது குழந்தைக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளும் பாசமிகு தந்தை கதாபாத்திரத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்துள்ளார். அவருடன் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும், ஜிப்ரான் வைபோதாவின் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் காட்சியமைப்பு, பிரதீப் இ. ராகவின் விறுவிறுப்பான படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்த ஆக்சன் காட்சிகள் ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சி கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ள “லீடர்” திரைப்படம், தற்போது ஓடிடி ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது.






