இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான பேட்மிண்டனை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அரிதாகவே உருவாகியுள்ளன. அந்த குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டு திரைப்படமாக “ரீமேட்ச்” உருவாகி வருகிறது.
பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக சேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூகப்பணிகளாலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர்.
பேட்மிண்டனுடன் தனிப்பட்ட நெருக்கம் கொண்ட பாலா, பல கதைகளை கேட்ட பிறகு “ரீமேட்ச்” படத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அனுபவமும் அவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படத்தின் கதை மற்றும் விளையாட்டு பின்னணி அவரை அதிகமாக ஈர்த்துள்ளது.
இந்த திரைப்படத்தின் மூலம் தானு ஹர்ஷா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாடகக் கலைஞர், மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாகவும் அறியப்படுகிறார்.
மேலும், இளவரசு, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, பா. மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். உடை வடிவமைப்பை அனுஷா மேற்கொள்கிறார்.
“ரீமேட்ச்” திரைப்படத்தை BOFTA திரைப்படக் கல்லூரியின் விருது பெற்ற மாணவரும், இயக்குநர் ராதா மோகனின் முன்னாள் இணை இயக்குநருமான ஆர். விமல் குமார் எழுதி இயக்குகிறார். “காற்றின் மொழி”, “பொம்மை” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
இந்த படத்தை Zinema Media and Entertainment Ltd நிறுவனத்தின் தினேஷ் ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் ஜி. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி. தனஞ்ஜெயன், படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன் புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார்.
தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.
ஒரே கட்டமாக நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு 2026 அக்டோபருக்குள் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டு, காதல், உணர்வு மற்றும் இன்றைய தலைமுறையின் உறவுகளை இணைத்து உருவாகும் “ரீமேட்ச்”, பேட்மிண்டனின் உற்சாகத்தை பெரிய திரையில் புதுமையாக கொண்டுவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.






