‘ஜடல்’ என்று அழைப்பீர்கள்! – “தி பாரடைஸ்” குறித்து நானி உற்சாகம்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படத்தின் புரமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தில் நானியுடன் கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்று, ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ‘தி பாரடைஸ்’ வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, நடிகர் நானி மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி, நவராத்திரி பண்டிகை காலத்தில் ‘தி பாரடைஸ்’ வெளியாக இருப்பதாகவும், நானி நடித்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களிடம் ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நானியின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், இப்படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் ‘திங்க் ஸ்டுடியோஸ்’ ஸ்வரூப் ரெட்டி பேசுகையில்,

” நவராத்திரி திருவிழாவின் போது நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வெளியாகிறது. நானி நடித்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாங்கள் நானி படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். இந்தப் படத்திற்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் வோடேலா பேசுகையில்,

” எனக்கு தமிழ் தெரியாது. அடுத்த படத்தில் தமிழை கற்றுக்கொண்டு பேசுகிறேன். இந்த திரைப்படம் தாயை பற்றியும்… புரட்சியைப் பற்றியும்… பேசும் திரைப்படம். இந்த வகையிலான திரைப்படம் ரசிகர்களுடன் அதிகமாக எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறோம்” என்றார்.

நடிகர் நானி பேசுகையில்,

” தி பாரடைஸ் திரைப்படம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும். நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன். ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது போன்றதொரு திரைப்படங்கள் வெளியாவது குறைவு. அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் தான் ‘தி பாரடைஸ்’. ஒவ்வொரு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை.‌ இந்தப் படம் அப்படிப்பட்டதொரு திரைப்படம். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்த படத்தை பார்த்த பிறகு சொல்வீர்கள்.‌ இந்த படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றி பேசி இருக்கிறோம். அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கி இருக்கிறோம். தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவிற்கும்… என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும்.. என்னுடைய சினிமா மீதான காதலுக்கும்… சினிமா மீது பிரியம் வந்ததற்கும்… தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேசன். அதிலும் கமல்ஹாசன்- மணிரத்னம்- பாக்கியராஜ்- பாரதிராஜா- என பல சாதனையாளர்களை குறிப்பிடலாம். நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வருகை தரும் போதெல்லாம் என்னுடைய திரை குடும்பத்திற்கு வந்தது போன்று உணர்வு எழும். எனக்கும், கடந்த காலத்தில் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. என் மீது தமிழ் ரசிகர்கள் மட்டும் அன்பும் அதிகம். அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய படத்திற்கு தமிழில் பின்னணி குரலில் பேசுவதற்கு தமிழ் ரசிகர்கள் மீதான பேரன்பு தான் காரணம். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் ‘தி பாரடைஸ்’. என்னுடைய திரையுலக பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான்.‌ நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் 24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது. அடுத்த முறை நான் என்னுடைய படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் என்னை ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்திருக்கும் ‘ஜடல்’ என்ற கேரக்டர் பெயரை சொல்லித்தான் அழைப்பீர்கள்” என்றார்.

அதிரடி ஆக்‌ஷன், வலுவான உணர்வுகள் மற்றும் அனிருத்தின் இசை என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.