மதுரையில் தொடங்கியது “டோரதி”யின் வித்தியாசமான விளம்பரப் பயணம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ‘டோரதி’ படத்தின் விளம்பரப் பணிகள் வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ளன. திரைப்படத்தின் கதையுலகையும், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையையும் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கில், மதுரையிலிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேரவனுடன் ரோடு ட்ரிப் தொடங்கப்பட்டுள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தலைமுறைகள், மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து பயணித்து வரும் இளையராஜாவின் இசை, ‘டோரதி’ திரைப்படத்திற்கும் முக்கியமான சிறப்பாக அமைந்துள்ளது. இதனை ரசிகர்களுடன் நேரடியாகக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேரவன், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் ஊர்களுக்கு பயணிக்கிறது.

‘டோரதி’ திரைப்படத்தின் கதையுலகில் இடம்பெறும் முக்கிய அம்சம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த கேரவன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் விளம்பர வாகனமாக மட்டுமின்றி, படத்திற்காக இளையராஜா உருவாக்கிய ஒரிஜினல் ஸ்கோரையும் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. கேரவன் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ‘டோரதி’ படத்தின் உலகமும், இளையராஜாவின் இசையும் ரசிகர்களை சந்திக்க இருக்கின்றன.

மதுரையில் நடைபெற்ற இந்த ரோடு ட்ரிப் தொடக்க நிகழ்வில், ‘டோரதி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரிஷிகாந்த், கேரவனை ஓட்டியபடி பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

மதுரையில் இருந்து புறப்பட்டுள்ள இந்த கேரவன் இன்று தேனி மற்றும் திண்டுக்கல் வழியாகப் பயணிக்கிறது. தொடர்ந்து நாளை பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளை நோக்கிச் செல்கிறது. குறிப்பாக, மேஸ்ட்ரோ இளையராஜா பிறந்த தேனி வழியாகவும், ‘டோரதி’ படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட திண்டுக்கல் பகுதிகள் வழியாகவும் இந்தப் பயணம் நடைபெறுகிறது.

இதனால் படத்தின் கதைக்களத்துடன் தொடர்புடைய பகுதிகள், படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் இளையராஜாவின் இசை என பல்வேறு அம்சங்களை ஒரே பயணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த கேரவன் அமைந்துள்ளது.

படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ‘டோரதி’ மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் சிறப்புத் திரையிடல்களில் இப்படம் இடம்பெற்றிருப்பதுடன், சமீபத்தில் வெளியான டிரெய்லரும் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

மேலும், இளையராஜாவின் இசை இப்படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் ஒரிஜினல் சவுண்ட் டிராக் இசை ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ள கதையுலகிற்கு இளையராஜாவின் இசை கூடுதல் தனித்துவத்தை வழங்குகிறது.

கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை, சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவையும், கணேஷ் சிவா படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். பவன் நரேந்திரா நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். கூடுதல் திரைக்கதையை சரவணன் சந்திரன் எழுதியுள்ளார். தினேஷ் சுப்பராயன் ஆக்ஷன் இயக்குநராகவும், ஷெரிஃப் எம். நடன இயக்குநராகவும், பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். சிங்க் சவுண்ட் டிசைனராக தாமஸ் குரியனும், தயாரிப்பு வடிவமைப்பாளராக குமார் கங்கப்பனும் இணைந்துள்ளனர்.