இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனின் புதிய திரைப்படம் “ஸ்கார்” – ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடக்கம்!

‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன், தற்போது தனது அடுத்த படைப்பாக ‘ஸ்கார்’ (Scar – தழும்பு) என்ற புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பான் இந்தியா முயற்சியாக தயாராகி வருகிறது.

ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்க, ஜி மீடியா ஃபிலிம் பேக்டரி இணை தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளது.

இந்த திரைப்படத்தின் பூஜை விழா கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் எளிமையாகவும், பக்தி நிறைந்த சூழலிலும் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தினர் இதில் கலந்துகொண்டு படப்பிடிப்பு பணிகளுக்கான தொடக்கத்தை அறிவித்தனர்.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து புதிய முகங்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் படக்குழு செயல்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடிகர், நடிகைகள் தேர்வு (Audition) தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஊட்டி, வயநாடு, பெங்களூரு மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு இயற்கை எழில் மிக்க இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

மேலும், படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த முழு விவரங்களும், ‘ஸ்கார்’ திரைப்படத்தின் டைட்டில் டீசரும் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஸ்கார்’ திரைப்படம் தொடர்பான நடிகர் பட்டியல், தொழில்நுட்பக் குழு மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.