நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் படக்குழு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த காணொலி, ஒரு திரைப்பட இயக்குநராக கீது மோகன்தாஸ் கொண்டிருக்கும் படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் தனித்துவமான செயல்பாட்டு பாணியை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
“வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்… வசனங்களை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும்… அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்” என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை வடிவமைப்பது, பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது, நடிகர்களின் நடிப்பை வழிநடத்துவது மற்றும் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவை துல்லியமாக வழிநடத்துவது போன்ற பல்வேறு தருணங்கள் இந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன.
இது ஒரு சாதாரண ‘பிஹைண்ட் த சீன்ஸ்’ காணொலி மட்டுமல்ல; இந்திய திரையுலகின் மிகப்பெரிய மற்றும் உலகளாவிய தரத்தில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘டாக்ஸிக்’ படத்தின் பின்னணியில் செயல்பட்டு வரும் கீது மோகன்தாஸின் ஆளுமையையும், அவரது படைப்பின் மீது கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் ஆவணமாக அமைந்துள்ளது.
இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவிலான தயாரிப்புகளை இயக்கும் பெண் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழும் கீது மோகன்தாஸ், இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றி வருகிறார். பரந்து விரிந்த செட்டுகள், சர்வதேச தரத்திலான தயாரிப்பு மதிப்பு, சிக்கலான சண்டைக் காட்சிகள் மற்றும் கதையின் உணர்வுகளை சமநிலைப்படுத்தி கையாளும் அவரது திறமையை இந்த காணொலி தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், அதன் பிரம்மாண்ட தயாரிப்பு மதிப்பு மற்றும் வித்தியாசமான கதை அமைப்பால் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டாக்ஸிக்’, விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





