ஹைதராபாத்: முன்னணி நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற Rugby Premier League Season 2 நிகழ்வில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம், ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான Sanchari பாடலை பாடிய அவர், மைதானத்தில் இருந்த பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.
நிகழ்வில் பேசிய ஸ்ருதிஹாசன், “ரக்பி பிரீமியர் லீக் நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மைதானம் முழுவதும் நிலவிய உற்சாகமான சூழல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. ரக்பி மட்டுமல்ல, எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் சவால்கள் இருப்பது இயல்பானது. ஆனால் ஒருவர் உண்மையாக நேசிக்கும் துறையில் உறுதியுடன் செயல்படும்போது, கடினமான நாட்கள்கூட மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. நல்ல நாட்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் ஊக்கத்தை அளிக்கின்றன” என்றார்.
மேலும், “ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்த விளையாட்டை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறேன். ராகுல் போஸ் பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். அவர் இந்த சிறப்பான முன்னெடுப்பு குறித்து கூறியபோது, குறிப்பாக இந்த ஆண்டு பெண்கள் அணிகளும் லீக்கில் பங்கேற்கின்றன என்று தெரிவித்தபோது, இந்த நிகழ்வில் பங்கேற்பது ஒரு கௌரவம் என்பதை உணர்ந்தேன்” எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் திறமைகள் எங்கும் உள்ளன என்றும், அவற்றை வளர்க்க நிதி உதவி, அங்கீகாரம், தரமான பயிற்சி மற்றும் ஆதரவான குழு ஆகியவை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். திறமையான வீரர்கள் தங்களது கனவுகளை நனவாக்கவும், தங்களது திறமையை பெரிய மேடையில் வெளிப்படுத்தவும் வாய்ப்பளித்து வரும் ரக்பி பிரீமியர் லீக்கின் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றும் ஸ்ருதிஹாசன் பாராட்டினார்





