ஒரே படத்தில் 11 கதாபாத்திரங்கள்… யோகி பாபுவின் மாபெரும் சவால்!

9 லைட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படத்தில், நடிகர் யோகி பாபு இதுவரை இல்லாத வகையில் 11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆர். கிஷோர் குமார் இயக்குகிறார்.

இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் கிஷோர் குமார் கூறுகையில், “இது காமெடி, ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த விறுவிறுப்பான படம். கதையின் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 வேடங்களில் யோகி பாபு தோன்றுகிறார். இதில் இரட்டை வேடங்களும் இடம்பெறுகின்றன. மேலும், பல்வேறு மொழிகளில் பேசும் கதாபாத்திரங்களாக அவர் நடித்திருப்பது படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். இந்த சவாலான முயற்சிக்காக அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார்,” என்றார்.

படத்தின் கதைக்களம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிறது. அதில் இருந்த பிளாக் பாக்ஸை கண்டுபிடிக்கும் முயற்சியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அந்த தேடலின் போது நாயகன் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்கள், அதிரடி மற்றும் நகைச்சுவையுடன் திரைக்கதையில் சொல்லப்படுகின்றன,” என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் மலையாள நடிகை அதிதி ரவி கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஜி. பாலமுருகன், படத்தொகுப்பாளராக ‘தனி ஒருவன்’ படத்தின் கோபி கிருஷ்ணா, கலை இயக்குநராக தாமு ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

9 லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து மற்றும் கென்யாவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. யோகி பாபுவின் வித்தியாசமான 11 வேடங்கள் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே தனித்துவமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.