அமைதியான தலைப்பைப் போலவே எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உருவாகி வந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேலாக நான்கு கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில் தொடங்கிய படப்பிடிப்பு, கேரளாவின் இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும், படத்திற்காக மூன்று பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டதுடன், ஸ்பென்சர் பிளாசா, அண்ணாசாலை, ஆச்சி ஹவுஸ், பெருங்குடி, அடையார் பாலம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களிலும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஈசிஆர் கோவளம் கடற்கரையில் நிறைவடைந்தது.
படப்பிடிப்பு நிறைவு குறித்து பேசிய இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, “‘ஹைக்கூ’ எங்களுக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான திரைப்படம். இந்தக் கதையை முழு சுதந்திரத்துடன் உருவாக்க தயாரிப்பாளர்கள் அளித்த ஆதரவு மிகப்பெரிய பலமாக இருந்தது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பால் இந்தப் படம் நினைத்தபடி உருவாகியுள்ளது. மனதை வருடும், மென்மையான, உணர்வுபூர்வமான திரையரங்கு அனுபவமாக ‘ஹைக்கூ’ ரசிகர்களை சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறுகையில், “இயக்குநர் யுவராஜ் சின்னசாமி ஆரம்பம் முதல் இந்தப் படத்தை தெளிவான பார்வையுடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கியுள்ளார். திட்டமிட்டபடி படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்ததும் இந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்.
படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே ‘ஹைக்கூ’ திரைப்படம் மற்றொரு முக்கிய சாதனையையும் படைத்துள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பிரீமியம் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே ஓடிடி ஒப்பந்தம் உறுதியானது, படத்தின் கதை மற்றும் தரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மொழி, பிராந்தியம் என்ற எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் பொதுவான உணர்வுகளைக் கொண்ட படைப்பாக ‘ஹைக்கூ’ உருவாகி வருவதாகவும், விரைவில் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்கள் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.





