வித்தியாசமான முயற்சி… கிராம மக்களின் கைகளால் வெளியான “என்ன விலை” முதல் பார்வை!

திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல நடிகர்கள் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடுவது வழக்கமாக இருக்கும் நிலையில், ‘என்ன விலை’ படக்குழு முற்றிலும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகேயுள்ள பாலம் கிராம மக்களே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுவதும் தங்களுக்கு அன்பும் ஒத்துழைப்பும் வழங்கிய கிராம மக்களுக்கு நன்றியறிதலாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், இது ஒரு சாதாரண ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாக இல்லாமல், சமூகத்துடன் இணைந்த மனமார்ந்த கொண்டாட்டமாக மாறியது.

விழா, கிராம மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக தொடங்கியது. பின்னர் அனைவரும் எதிர்பார்த்திருந்த ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினரும், கிராம மக்களும் கலந்துரையாடி மகிழ்ந்ததுடன், பாரம்பரிய கிராம விருந்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த தருணம் படக்குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் மறக்க முடியாத நினைவாக அமைந்தது.

கலாமயா சினிவர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனு கோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ள இப்படத்தை சஜீவ் பாழூர் எழுதி இயக்கியுள்ளார். சமூக மற்றும் அரசியல் பின்னணியில் உருவாகும் குடும்ப த்ரில்லரான இதில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியாகும் முன்பே, தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

தயாரிப்பாளர் ஜித்தேஷ் பகிர்ந்து கொண்டதாவது,

“ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆனால் நன்றியுணர்வோடு தொடங்கும் வாய்ப்பு சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும். பெரும்பாலான படங்களின் ஃபர்ஸ்ட் லுக் பிரபலங்களாலோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியாகிறது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு அளவற்ற அன்பும் ஆதரவும் கொடுத்த பாலம் கிராம மக்களே எங்கள் படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இது ஒரு விளம்பர நிகழ்வு மட்டுமல்ல, அவர்களுக்கு நாங்கள் தெரிவித்த மனமார்ந்த நன்றியாகும்” என்றார்.

இயக்குநர் சஜீவ் பழூர் பகிர்ந்து கொண்டதாவது,

“ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது கதைக்கான இடத்தை தேர்வு செய்வோம். ஆனால், சில நேரங்களில் அந்த இடமும், அங்கு வாழும் மக்களும் அந்தக் கதையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகின்றனர். ‘என்ன விலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பாலம் கிராம மக்கள் எங்களை குடும்பமாக அரவணைத்தனர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைச் சந்திப்பதற்கு முன், இந்த திரைப்படம் முதலில் அவர்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, என்றென்றும் எங்களுக்கு மகிழ்ச்சியான நினைவு” என்றார்.

திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே ‘என்ன விலை’ திரைப்படம் தனது முதல் ரசிகர்களை பாலம் கிராமத்தில் கண்டுபிடித்துள்ளது. சமூக ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படத்தின் பயணத்திற்கு அழகான தொடக்கமாக அமைந்துள்ளது.