தமிழ் சினிமாவில் தரமான குற்றப் பின்னணி திரில்லர் படங்களின் வரிசையில் இடம்பிடித்த ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச திரைப்பட அரங்கிலும் கவனம் பெற்றுள்ளது. ஆசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (SIFF 2026)-வில் திரையிட தேர்வான ஏழு இந்திய திரைப்படங்களில் ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், இந்தியாவில் இருந்து மொத்தம் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து தேர்வான ஒரே திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பிடித்திருப்பது படக்குழுவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
முதல் பாகத்தைப் போலவே ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். கதாநாயகனாக பரத் நடித்துள்ள இப்படத்தில் அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கூடுதல் திரைக்கதையை அரவிந்த் ஆனந்த் எழுதியுள்ளார்.
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்களான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.
தற்போது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது, ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் கலைநயம், தொழில்நுட்பத் தரம் மற்றும் உலகளாவிய வரவேற்புக்கான முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. சர்வதேச அரங்கில் தமிழ்த் திரைப்படத்தின் தடத்தை மேலும் வலுப்படுத்தும் சாதனையாகவும், உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் இந்த தேர்வு அமைந்துள்ளது.





