தமிழில் சுயாதீன இசைக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திரைப்படப் பாடல்களுக்கு இணையாக இன்டிபென்டன்ட் பாடல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். அந்த வரிசையில் காதல், பிரிவு, நகைச்சுவை மற்றும் குத்து இசையை வித்தியாசமான கதையாடலுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய சுயாதீன பாடல் ‘விட்ரா மச்சா’ தற்போது வெளியாகியுள்ளது.
ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ரூபேஷ் திவாரி இசையமைப்பதுடன், பாடலை எழுதி பாடவும் செய்துள்ளார். துள்ளலான இசை, நகைச்சுவை கலந்த வரிகள் மற்றும் உற்சாகம் தரும் குத்து இசை என பாடல் முழுவதும் புதுமையான அணுகுமுறை இடம்பெற்றுள்ளது.
ஒரு இளம் காதல் ஜோடி தொலைபேசியில் பேசுவதுடன் ‘விட்ரா மச்சா’ தொடங்குகிறது. உரையாடலின்போது கதாநாயகி ‘பிரேக்’ என்று கூறும் நிலையில், தனது வார்த்தையை முழுமையாக முடிப்பதற்கு முன்பே தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் அவர் ‘பிரேக் அப்’ என்று சொல்லிவிட்டதாக கதாநாயகன் தவறாக புரிந்துகொள்கிறார்.
காதல் முடிந்துவிட்டதாக நினைத்து கதாநாயகன் சோகத்தில் மூழ்க, அந்த சூழ்நிலையைச் சுற்றி பல நகைச்சுவையான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில், அவனது நண்பரோ காதல் உறவு முடிந்ததை ஒரு புதிய சுதந்திரத்தின் தொடக்கமாக கருதி கொண்டாடுகிறார். ஒருபுறம் கதாநாயகனின் சோகம், மறுபுறம் நண்பனின் உற்சாகம் என மாறுபட்ட உணர்வுகளுடன் பாடல் நகர்கிறது.
குத்து இசையின் வேகமான தாளங்களுக்கு இடையே கதாநாயகனின் சோகத்தை வெளிப்படுத்தும் வரிகளும், காதல் உறவை நினைவுகூரும் வித்தியாசமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சோகமான மனநிலையையும் துள்ளலான இசையையும் எதிரெதிராக அமைத்திருப்பதே பாடலின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.
பாடலின் இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பம் கதைக்கு மேலும் சுவாரஸ்யம் சேர்க்கிறது. உண்மையிலேயே காதல் முறிந்துவிட்டதாக ரசிகர்கள் நினைக்கும் தருணத்தில், கதாநாயகியை நேரில் சந்திக்கும் கதாநாயகன், நடந்தது வெறும் தவறான புரிதல் என்பதை உணர்கிறார். இந்தக் குழப்பத்தை நகைச்சுவையான திருப்பமாக மாற்றியிருப்பதன் மூலம் ‘விட்ரா மச்சா’ வழக்கமான காதல் தோல்விப் பாடல்களிலிருந்து தனித்து நிற்கிறது.
கிக்கர்ஸ் டான்ஸ் க்ரூ ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு பிரதீப் நடன அமைப்பு செய்துள்ளார். மஹபூப் தயாரிப்பாளராகவும், முகின் ஜெயராஜ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். பாஸ்கர் யூனிட்ஸ் மற்றும் முவி மீடியா கேமரா பிரிவில் இடம்பெற்றுள்ளனர். ஹரிஷ் ராம் மற்றும் அவினாஷ் இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்.ஜி. கிருஷ்ணா கலை இயக்கத்தையும், உதய் கிருஷ்ணமூர்த்தி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். கிருபாராஜ் டிஐ பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கேட்கத் தொடங்கியவுடன் கவரும் இசை, வித்தியாசமான கதை சொல்லும் முறை, நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுகளை ஒன்றாக இணைத்திருக்கும் அணுகுமுறை என ‘விட்ரா மச்சா’ சுயாதீன இசை ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
தெலுங்கு இசை உலகில் ஏற்கனவே பிரபலமான கே மியூசிக் தமிழ் இசை லேபிள் சார்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், தமிழ் சுயாதீன இசை உலகில் புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது.





