இசையின் மகத்துவத்தை மீண்டும் திரையில் கொண்டாட வருகிறது “சங்கராபரணம்”!

இந்தியத் திரையுலகில் இசைக்கும் கலாச்சாரத்திற்கும் தனி அடையாளத்தை ஏற்படுத்திய ‘சங்கராபரணம்’ திரைப்படம், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பீப்பிள்ஸ் ஃபிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 4K அல்ட்ரா HD காட்சித் தரம் மற்றும் 7.1 சரவுண்ட் ஒலி நுட்பத்துடன் மறுவெளியீடு செய்கின்றன. இப்படத்தின் புதிய டிஜிட்டல் பதிப்பை ஸ்ரீலால் தேவராஜ் உருவாக்கியுள்ளார்.

கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’, கர்நாடக இசையின் சிறப்பையும், இசைக் கலைஞரின் வாழ்க்கைப் போராட்டங்களையும், மனித உறவுகளின் உணர்வுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்த திரைப்படமாகும். ஜே.வி. சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜ்யலட்சுமி, துளசி, சந்திரமோகன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியாகி பல ஆண்டுகள் கடந்தபோதிலும், இசை ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் இப்படம், இந்திய சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

கே.வி. மகாதேவன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தனது தனித்துவமான குரலில் பாடிய ‘சங்கரா…’ பாடல், இந்தியத் திரையிசை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது. காலங்கள் மாறினாலும் அதன் இனிமையும் இசைச் சிறப்பும் குறையாமல், பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்தியப் பாரம்பரிய இசையின் பெருமையையும், அதன் கலாச்சார அடையாளங்களையும் உலக அளவில் எடுத்துச் சென்ற இப்படம், தேசிய அளவில் பல்வேறு அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளது. சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற ‘சங்கராபரணம்’, 1980ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியிடமிருந்து தங்கப் பதக்கத்தையும் பெற்றது. மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரையிடப்பட்ட சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.

தற்போது மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள ‘சங்கராபரணம்’, ரசிகர்களுக்கு புதிய திரையரங்க அனுபவத்தை வழங்கத் தயாராகியுள்ளது. குறிப்பாக, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இனிமையான குரலை 7.1 சரவுண்ட் ஒலி நுட்பத்தில் பெரிய திரையில் கேட்டு ரசிப்பது இசைப் பிரியர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ஏற்கெனவே இப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு, தங்களின் பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாக இந்த மறுவெளியீடு அமையும். அதேசமயம், இன்றைய இளம் தலைமுறையினர் இந்தியத் திரையிசையின் பெருமையை உணர்த்தும் இத்தகைய காலத்தால் அழியாத படைப்பை நவீனத் திரையரங்கத் தொழில்நுட்பத்தில் கண்டு ரசிக்கவும் இது சிறந்த வாய்ப்பாக அமையும்.