திருமணத்துக்குப் பிறகு மணமகள் கணவர் வீட்டிற்குச் செல்வதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், இந்த வழக்கத்தை மாற்றி, திருமணத்துக்குப் பிறகு மாப்பிள்ளையே மணமகள் வீட்டில் குடியேறினால் என்னென்ன சுவாரஸ்யங்கள் நிகழும்? இதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix வெளியிட்டுள்ளது.
இயக்குநர் இளன், இப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி Netflix தளத்தில் இப்படம் வெளியாகிறது.
டிரெய்லரில் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா நடித்துள்ளார். தன்னம்பிக்கை கொண்ட, சுதந்திரமான சிந்தனையுடைய இளம் பெண்ணான பவி, தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத இன்ஃப்ளூயன்சராகக் காட்டப்படுகிறார்.
இதனால் திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிலேயே குடியேறுகிறார். அதன் பின்னர் அந்தக் குடும்பத்தில் நிகழும் மாற்றங்களும், புதிய உறவுகளால் உருவாகும் சிக்கல்களும், சிரிப்பூட்டும் சம்பவங்களுமே கதையின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன.
மாமியார் வீட்டுக்குச் செல்லும் மணமகள் என்ற வழக்கமான திருமணக் காட்சியை மாற்றி, “ஏன் எப்போதும் மணமகள்தான் தனது வீட்டை விட்டு செல்ல வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறது இப்படம். திருமணம், காதல், குடும்ப உறவுகள் மற்றும் தனிமனித விருப்பங்கள் குறித்த வழக்கமான பார்வையை நகைச்சுவை கலந்து புதிய கோணத்தில் அணுகுகிறது.
ஒரே வீட்டில் புதிதாக இணையும் மாப்பிள்ளை, அங்குள்ள குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு, கருத்து வேறுபாடுகள், எதிர்பாராத சூழல்கள் என பல்வேறு நிகழ்வுகள் டிரெய்லரில் கலகலப்பாக இடம்பெற்றுள்ளன. காதலையும் குடும்ப உணர்வுகளையும் நகைச்சுவையுடன் இணைத்து, ஒவ்வொருவரும் தங்களுக்கான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்வதன் முக்கியத்துவத்தை இப்படம் பேசுகிறது.
இளன் மற்றும் சான்வி மேக்னாவுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் படத்தின் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
இயக்குநரும் கதாநாயகனுமான இளன் கூறுகையில்..,
“‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு விஷயத்தை, அதே நேரத்தில் புதுமையான கோணத்தில் சொல்ல விரும்பினோம். திருமணம் குறித்த நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடுக்கும் ஒரு உறவை இந்த டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது.
குடும்பத்தின் தனித்துவத்தையும், அதில் இருக்கும் அன்பு, சிரிப்பு, ஒற்றுமை ஆகியவற்றையும் கொண்டாடும் கதையாக இது இருக்கும். எனது நடிப்பு அறிமுகத்தை எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு கதையின் மூலம் தொடங்குவது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தப் படத்தை Netflix மூலம் ரசிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
பவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சான்வி மேக்னா கூறுகையில்..,
“பவி தன்னம்பிக்கையானவள், சுதந்திரமானவள். தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்துடன் இருப்பவள். அதே நேரத்தில் தான் நேசிக்கும் மனிதர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவள்.
தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவள் தெளிவாக இருக்கிறாள். அதுதான் அந்தக் கதாபாத்திரம் என்னை ஈர்த்ததற்கான முக்கிய காரணம். டிரெய்லரில் பவியின் குணத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதலும், வாழ்க்கைத்துணை உறவும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு புதிய கோணத்தை பவி காட்டுவதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில்..,
“குடும்ப உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், நகைச்சுவையுடன் இந்தப் படம் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு தலைமுறையும் திருமணத்தை வெவ்வேறு விதமாகப் பார்க்கிறது.
அந்த வித்தியாசமான பார்வைகள்தான் பல சிரிப்பான, உணர்வுப்பூர்வமான மற்றும் நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய தருணங்களை உருவாக்குகின்றன” என்றார்.
நடிகர் யோகி பாபு கூறுகையில்..,
“இந்த டிரெய்லர் நாங்கள் படப்பிடிப்பில் அனுபவித்த கலாட்டாவில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சாதாரண விஷயங்களிலிருந்துதான் படத்தின் நகைச்சுவை உருவாகிறது. அதனால்தான் அது அனைவருடனும் எளிதாக கனெக்ட் ஆகும்.
ரசிகர்கள் எங்களுடன் சேர்ந்து சிரித்து, குடும்பத்துடன் இந்தப் படத்தை ரசிப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
ஒரு திருமணம்… இரண்டு குடும்பங்கள்… வழக்கத்தை மாற்றும் ஒரு மாப்பிள்ளை… அதனால் உருவாகும் எண்ணற்ற கலாட்டாக்கள்!
வித்தியாசமான திருமணக் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.





