25 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட “கோந்தல்” – நாளை உலகளாவிய வெளியீடு!

இந்தியாவின் 99வது ஆஸ்கர் விருதுகளுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் சந்தோஷ் தாவகாரின் ‘கோந்தல்’ திரைப்படம், நாளை (நவம்பர் 13) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என மொத்தம் ஏழு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம், உளவியல் மர்மத் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. வெளியாகியுள்ள சர்வதேச டிரெய்லர், மர்மமான சம்பவங்கள், விறுவிறுப்பான திருப்பங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் தொன்மையான கலாசாரப் பின்னணியை ஒருங்கிணைத்து படத்தின் கதையுலகத்தை அறிமுகப்படுத்துகிறது.

மராத்தி மொழியில் உருவான ஒரு திரைப்படம், ஏழு மொழிகளில் வெளியாகி சர்வதேச அளவில் திரையரங்குகளைச் சென்றடைவது இதுவே முதல் முறை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது.

மகாராஷ்டிராவின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் கதை, புதிதாகத் திருமணமான சுமன் மற்றும் ஆனந்த்ராவைச் சுற்றி நகர்கிறது. காதல், தனிப்பட்ட விருப்பங்கள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் பக்தி ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் அவர்களது வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதே கதையின் அடிப்படையாக அமைந்துள்ளது.

திருமண வாழ்க்கையில் மணமகளின் எதிர்பார்ப்புகளும், கணவனின் கடமைகளும் ஒன்றுக்கொன்று முரண்படும் சூழலில், எதிர்பாராத மர்ம நிகழ்வுகள் அவர்களைச் சிக்கலான நிலைக்குத் தள்ளுகின்றன. உண்மைக்கும் மாயைக்கும் இடையிலான எல்லை எது, வெளியில் தெரிவதுதான் நிஜமா என்ற கேள்விகளை எழுப்பும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கலாசார அடையாளங்களுடன் உளவியல் பதற்றத்தையும் இணைத்துள்ள டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் தாவகார் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தியத் திரைப்படங்கள் குறித்த உலகளாவிய பார்வை பெரும்பாலும் வறுமை மற்றும் சாதிய மோதல்கள் சார்ந்த கதைகளால் உருவாக்கப்படுகிறது. அவைதான் கள யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே இந்தியாவின் முழுமையான அடையாளம் அல்ல.

‘கோந்தல்’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல! தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமம். இந்தப் பாரம்பரியத்தை உலகம் அறிந்துகொள்ளச் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்கள், நமது கலாச்சாரத்தை இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லத் திரைப்பட இயக்குநர்களுக்கு உதவுகின்றன” என்றார்.

99வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக இடம்பெற்றுள்ள ‘கோந்தல்’, இதர விருதுப் பிரிவுகளிலும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான Silver Peacock விருதை சந்தோஷ் தாவகார் வென்றுள்ளார். இப்படத்தைப் பார்வையிட்ட நடுவர் குழுவினர், நிஜ வாழ்க்கைப் பின்னணியில் உருவான ஷேக்ஸ்பியர் நாடகத்தைப் போன்ற அனுபவத்தை வழங்குவதாகப் பாராட்டியுள்ளனர்.

இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி, நிஷாத் போயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சந்தோஷ் தாவகார், தனது தயாரிப்பு நிறுவனமான தாவகார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீக்ஷா தாவகாருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிராந்தியக் கதைகளுக்கு உலகளாவிய அடையாளத்தை உருவாக்குவதுடன், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை மற்றும் நடிப்பு என அனைத்துத் துறைகளிலும் தரமான படைப்புகளை உருவாக்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமலேந்து சௌத்ரி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில், தொடக்கத்திலேயே சுமார் 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட நீண்ட காட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில்நுட்ப முயற்சியும் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரை, சர்வதேச அங்கீகாரம், இளையராஜாவின் இசை மற்றும் தனித்துவமான கலாசாரப் பின்னணி எனப் பல சிறப்புகளுடன் உருவாகியுள்ள ‘கோந்தல்’ திரைப்படம், நாளை நவம்பர் 13ஆம் தேதி ஏழு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.