விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் “இஞ்சி வெல்லம்” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தியத் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் மணிரத்னம், மீண்டும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். ஏற்கெனவே இக்கூட்டணியில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அந்த வெற்றிக் கூட்டணி தற்போது விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் காதல் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தொடர்கிறது.

தனித்துவமான திரைக்கதை அமைப்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் நேர்த்தியான படைப்பாக்கம் என ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிய அனுபவத்தை வழங்கி வருபவர் மணிரத்னம். அவரது அடுத்த படைப்பு என்பதால் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இப்படத்தில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த சைத்ரா ஆச்சார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘சப்த சாகரதாச்சே எல்லோ சைடு பி’ உள்ளிட்ட படங்களின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற இவர், ‘மீசைய முறுக்கு 2’, ‘3BHK’, ‘ரூம் நம்பர் 418’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான பிட் டிராக் இசையுடன் கூடிய கிளிம்ப்ஸ் வீடியோ, கொல்கத்தா நகரின் அழகையும், படத்தின் காட்சி உலகத்தையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த இசையும் காட்சிகளும் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளதால், முழுமையான பாடல்களின் தொகுப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

படத்தின் முதல் பாடல் வெளியீடு, பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளின் அழகை மணிரத்னத்தின் தனித்துவமான திரைமொழியில் சொல்ல வரும் ‘இஞ்சி வெல்லம்’, 2027 ஜனவரி 29ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.