‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் K.P. ஜெகன். மேலும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியதுடன், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்திலும் தனது நடிப்பால் கவனம் பெற்றவர். இவர் தற்போது தனது அடுத்த படைப்பாக ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) என்ற புதுமையான பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் இயக்குநர் K.P. ஜெகன், தனது சொந்த அடையாளமான இயக்குநர் ஜெகன் என்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். விஜய் வர்மா மற்றொரு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தின் மூலம் அறிமுகமான சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார்.
இவர்களுடன் மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், சிவனடியார் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்றுள்ளார்.
படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா மற்றும் இயக்குநர் திரைவண்ணன் இணைந்து மற்றொரு பாடலை எழுதியுள்ளனர். அறிமுகப் பெண் கவிஞர் சக்தி உமா பாலகிருஷ்ணா ஒரு பாடலை எழுதியுள்ளார். மேலும், மறைந்த தேனிசைத் தென்றல் தேவா தனது இறுதிப் பாடலாகப் பாடிய மனதைத் தொடும் ஆன்மீகப் பாடலும் இப்படத்தில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
அறிமுக ஒளிப்பதிவாளர் சுக செல்வம் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பையும், வீரசமர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகள் இயற்கையாகப் பெய்த மழையிலேயே படமாக்கப்பட்டுள்ளன.
யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தயாரிப்பு மேலாண்மையை சாமுவேல் சிவராஜ் பொறுப்பேற்றுள்ளார். திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு இயக்குநர் K.P. ஜெகனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இயல்பான நகைச்சுவையையும், விறுவிறுப்பான திரில்லர் அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் படத்தின் உள்ளடக்கத்தால் ஈர்க்கப்பட்டு, தங்களது நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.





