இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கத்தில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதையின் நாயகனாக நடித்துள்ள காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns). தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் பெற்றுள்ளார்.
காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள், காலம் கடந்தும் மனதில் நிலைத்திருக்கும் உறவுகள், நிறைவு பெறாமல் தொடரும் நினைவுகள் என அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் உணர்வுகளை நகைச்சுவையும் காதலும் கலந்து சொல்லும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா, ரெஞ்சித் சேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஹம்மது கபீர் கதை எழுதியுள்ளார். ஜாபின் ஜான் மற்றும் அஹம்மது கபீர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்ய, மகேஷ் புவனேந்த் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். விஷ்ணு கோவிந்த் ஒலிப்பதிவுப் பணியையும், மஷார் ஹம்சா ஆடை வடிவமைப்பையும், ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனைப் பணியையும் கவனித்துள்ளனர். அனு விஸ்வநாதன் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
ஏற்கனவே ‘ஜூன்’ மற்றும் ‘மதுரம்’ ஆகிய உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை இயக்கிய அஹம்மது கபீர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெற்ற ‘கேரளா கிரைம் ஃபைல்ஸ்’ இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’, மாறுபட்ட கதைக்களத்துடன் காதல் மற்றும் நகைச்சுவையை ரசிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு திரைப்படங்களைத் திரையரங்குகளுக்குக் கொண்டு சேர்த்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இப்படத்தின் வெளியீட்டுப் பொறுப்பையும் ஏற்றுள்ளது. இதன் மூலம் காளிதாஸ் ஜெயராமின் புதிய திரைப்படம் தமிழ் ரசிகர்களிடமும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





