பிரார்த்தனாவுடன் ஜோடி சேரும் ஜி.வி. பிரகாஷ்… “நிஞ்ஜா” புதிய படம் அறிவிப்பு!

இயக்குநர் முருகு இயக்கத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘நிஞ்ஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுமையான காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை உள்ளடக்கிய பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்களாக தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் திரைப்படம் என்பதால், ‘நிஞ்ஜா’ அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் இசையமைப்பாளராக மட்டுமே இணைந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது கதையின் நாயகனாகவும் நடிக்கிறார்.

‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற பிரார்த்தனா, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை முருகு எழுதி இயக்குகிறார். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 அன்று தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீபதி சினிமாஸில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக 20 நாட்கள் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்தின் கேமராவுக்கு முன்னும் பின்னும் பல புதிய திறமையாளர்கள் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இப்படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி, கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். பிரியா ரவி ஆடை வடிவமைப்பையும், தினேஷ் காசி சண்டைக் காட்சிகளின் இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்த கே.எஸ். சினிஷ், தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும், பா. ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தையும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி. பிரகாஷ் குமார் – சீன் ரோல்டன் – முருகு ஆகியோரின் புதிய கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’, காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட வித்தியாசமான பொழுதுபோக்குப் படமாக உருவாகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.