‘டீ கே’ (Dee Kay) என்ற பெயரில் ரசிகர்களிடம் பிரபலமாக அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். தொலைக்காட்சித் தொடர்களில் தொடங்கிய தனது பயணத்தை தற்போது திரைத்துறை மற்றும் ஓடிடி என அடுத்தடுத்த தளங்களுக்கு விரிவுபடுத்தி வருகிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட் பீட்’ உள்ளிட்ட தொடர்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற இவர், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பரவலான வரவேற்பைப் பெற்றார்.
கார்த்திகேயனின் நடிப்பு, முகபாவனைகள், தோற்றம் மற்றும் திரையில் வெளிப்படுத்தும் ஸ்டைல் ஆகியவை இளம் வயது கமல்ஹாசனை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சிலர் பாராட்டி வருகின்றனர். இந்த ஒப்பீட்டை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் கார்த்திகேயன், கமல்ஹாசன் தனது ஆதர்ச நடிகர் மட்டுமல்லாமல், தனது நடிப்புப் பயணத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாகவும் இருப்பதாகக் கூறுகிறார்.
கமல்ஹாசன் நடித்த திரைப்படங்களில் ‘அன்பே சிவம்’ கார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது. வழக்கமான கதாநாயக பிம்பத்தைத் தாண்டி, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கமல்ஹாசன் தேர்வு செய்த படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தன்னை பெரிதும் கவர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிப்பைத் தாண்டி இசையின் மீதும் கார்த்திகேயனுக்கு தனிப்பட்ட ஈடுபாடு உள்ளது. குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசை, அவரது வாழ்க்கையிலும் கலைப் பயணத்திலும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதனிடையே, தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை அவசரமாக ஏற்றுக்கொள்ளாமல், தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் அவர் கவனமாக இருந்து வருகிறார்.
தனது நடிப்புத் தேர்வு குறித்து கார்த்திகேயன் கூறுகையில், “பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்ற அவசரம் எனக்கு இல்லை. எனக்கு பொருத்தமான சரியான வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்க விரும்புகிறேன். ஒரு நடிகராக எனக்கு சவால் அளிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதே முக்கியம். வெறும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதைவிட, ஒவ்வொரு படியாகவும் என்னை வளர்த்துக்கொள்வதையே விரும்புகிறேன்” என்கிறார்.
திரையில் சில காட்சிகளில் மட்டும் தோன்றி மறையும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதை விட, தனது நடிப்புத் திறனின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள கதாபாத்திரங்களையே கார்த்திகேயன் எதிர்பார்க்கிறார். தொலைக்காட்சி, ஓடிடி மற்றும் திரைப்படம் என வெவ்வேறு தளங்களில் பெற்ற அனுபவம், அவருடைய நடிப்புப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து திரையுலகை நோக்கி வந்துள்ள கார்த்திகேயன் டிகே, தனக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சரியான வாய்ப்புக்காக அவர் காத்திருக்கும் இந்தப் பயணம், எதிர்காலத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரங்களை பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.





