தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, அவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் குழுவில் உறுப்பினராக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை மிகவும் முக்கியமானதாகக் கருதி செயல்படப் போவதாக தெரிவித்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, தமிழகத்தின் திருக்கோயில்கள் நமது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் ஆன்மிக வாழ்வின் முக்கிய அடையாளங்களாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது:
“இந்த நியமனத்தை எனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பொறுப்பாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் நமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வின் முக்கியமான அடையாளங்களாக விளங்குகின்றன. அவற்றின் சிறப்புக்கு பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரையரங்குகள், திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த 16 ஆண்டுகளாக ஏஜிஎஸ் குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் அர்ச்சனா கல்பாத்தி, ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் என்றும், திருக்கோயில்கள் மற்றும் பல்வேறு அறப்பணிகளில் தனது பங்களிப்பை வழங்கி வருபவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
கல்விப் பின்னணியிலும் சிறந்து விளங்கும் அர்ச்சனா கல்பாத்தி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகம், பஃபலோவில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும், எஸ்.எம்.யூ., ஸ்விஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஸ் மற்றும் யேல் தொடர்பான கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை துறையிலும் முதுகலைப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.
திருக்கோயில்களுக்கான பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் முக்கியமான பணியில் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.





