தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் திருக்கோயில்களுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து, உரிய பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் குழுவில் உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பதவியாக பார்க்காமல், ஒரு முக்கியமான பொறுப்பாக கருதி செயல்படப் போவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர்,
“இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல முருகன் அருளால் எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டும்,” என்றார்.





