ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறைகளின் பணிகளை, எந்தவித உதவியாளர்களின் துணையும் இன்றி தனி ஒருவராக செய்து முடித்து, புதிய சாதனையை படைத்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அவரது இந்த அசாத்திய முயற்சியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ONE MAN’.
திரைப்படத் தயாரிப்பில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கலைஞர்கள் மற்றும் ஏராளமான உதவியாளர்கள் பணியாற்றுவது வழக்கம். ஆனால், கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, தொழில்நுட்பப் பணிகள் என 70-க்கும் மேற்பட்ட பொறுப்புகளை ஒரே நபராக சங்ககிரி ராஜ்குமார் கையாண்டிருப்பது திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரே நபரின் முயற்சி என்பதால் ‘ONE MAN’ ஒரு திரைப்பட விழாக்களுக்கான கலைப்படைப்பாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு மாறாக, படம் முழுவதும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங், இரண்டு ரயில்கள் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் மற்றும் மிகப்பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் உயிர் தப்பும் காட்சிகள் என பல சவாலான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
சிறப்புக் காட்சியைப் பார்த்த திரையுலகைச் சேர்ந்தவர்கள், திரைப்படத்தை உருவாக்கிய விதம் மட்டுமின்றி அதன் கதைக்களம், திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளையும் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்துள்ளார். இருப்பினும், திரையில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனி மனிதர்களாகவே பார்வையாளர்களுக்குத் தோன்றும் வகையில் அவரது நடிப்பும் காட்சியமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கதாபாத்திரத்திடம் இருந்து மற்றொரு கதாபாத்திரம் எப்படி தப்பிக்கும், அவர்களுக்குள் என்ன பிரச்சனை உருவாகும் என்ற கேள்விகளை எழுப்பும் விதத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கிய விதத்தை மற்றொரு கேமரா மூலம் தனியாக பதிவு செய்து வைத்திருப்பதும் ‘ONE MAN’ படத்தின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக அமைந்துள்ளது.
பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் போலவே, ஒரு தனி மனிதனாகவும், தமிழனாகவும் தான் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையை சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
பல துறைகளின் பணிகளை ஒரே நபர் மேற்கொண்டு உருவாக்கியுள்ள ‘ONE MAN’, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





