தனது அடுத்த திரைப்படத்திற்கு ‘ஒரண்ட’ என பெயரிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்த இயக்குநர் சுசி கணேசன், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 அன்று இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், அவரது பிறந்தநாள் இந்த ஆண்டு படக்குழுவினருடன் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய இயக்குநர் சுசி கணேசன்,
“சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில சமயங்களில் வித்தியாசமாக அமைந்து விடும். அந்த வகையில், இத்தனை படங்களில் ‘ஒரண்ட’ மட்டுமே என் பிறந்தநாளில் முடிந்திருக்கிறது. அதுவும் இரட்டை கொண்டாட்டமாக பிறந்தநாளோடு சேர்த்து படப்பிடிப்பின் நிறைவு நாளையும் படக்குழுவினரோடு கொண்டாடியது நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்,” என்றார்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் ‘ஒரண்ட’ படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னும் ரகசியமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக சமீபத்தில் மாற்றினார் இயக்குநர் சுசி கணேசன்.
கதை குறித்தோ, கதாபாத்திரங்கள் குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில், அன்றாட பேச்சுவழக்கில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக மாற்றியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.





