‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது.
பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு, படத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார். முதல் முறையாக இந்த இருவரும் இணையும் திரைப்படம் என்பதால், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் நடிக்கிறார். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கிடா’ திரைப்படத்தை இயக்கிய ரா. வெங்கட், இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா–மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப பந்தங்களின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை பேசும் குடும்பத் திரைப்படமாக உருவாகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
K. குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன், கலை இயக்கத்தை K.B. நந்தபாலன், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் மேற்கொள்கின்றனர். ஒலிப்பதிவை T. உதய் குமார், புகைப்படங்களை அன்பு கவனிக்கிறார்.
நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பூஜையுடன் தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வலுவான கதைக்களம், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திறமையான நடிகர்கள் இணைந்துள்ள ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளின் ஆழத்தை பேசும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.






