கமல்ஹாசனின் பாராட்டால் உற்சாகமான “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு!

மலையாளத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த உலகநாயகன் கமல்ஹாசன், படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

படத்தின் கதை சொல்லும் விதம், திரை வடிவமைப்பு மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என ஒட்டுமொத்த படக்குழுவின் பணியையும் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக, படத்தை சுவாரஸ்யமாக உருவாக்கிய விதத்தையும், படக்குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டியதுடன், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

இந்த சந்திப்பில் படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் சார்பில் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மலையாளத்தில் வெளியானபோது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இப்படமும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், திரைப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை பாராட்டியிருப்பது, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் பயணத்தில் கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. அவரது பாராட்டும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினருக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.