மிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இளம் நட்சத்திரம் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக காணொளி, ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் மேற்கொண்டுள்ளனர்.
குடும்பம் முழுவதும் ஒன்றாக ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஹாய்’ படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தயாரிப்பாளர்களாக நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ். லலித்குமார் செயல்பட்டுள்ள நிலையில், வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில்வாகனன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொட்யூசராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஏற்கனவே வெளியாகியுள்ள படத்தின் முதல் பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு காணொளியில், ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
”ஹாய் திரைப்படம்- பெயருக்கு ஏற்றபடி எளிமையான… இனிமையான…. திரைப்படம். ரசிகர்கள் தங்களுடைய குடும்பத்துடன் இரண்டே கால் மணி நேரம் ஜாலியாக பார்த்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது. சென்னை- கோயம்புத்தூர்- பொள்ளாச்சி- ஆகிய மூன்று இடங்களில் ‘ஹாய்’ படத்தின் கதை நிகழ்கிறது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ – ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ – ‘யாரடி நீ மோகினி’ படங்களைப் போல் வில்லன்களே இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகி இருக்கிறது” என்றார்.
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற வெற்றிப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகியிருப்பதும், நயன்தாரா–கவின் முதல் கூட்டணியும், மூத்த நட்சத்திரங்கள் இணைந்திருப்பதும் ‘ஹாய்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.





