இளமை துள்ளலுடன் “ராவடி”… வெளியானது ரிலீஸ் தேதி மற்றும் புதிய வீடியோ!

பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘ராவடி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

அதன்படி, ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அறிவிக்கும் விதமாக படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரும், ‘குஜிலிமஸ்து’ (Gujilimasthu) எனும் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

‘குஜிலிமஸ்து’ வீடியோ, உற்சாகமான கொண்டாட்டக் காட்சியுடன் தொடங்குகிறது. பின்னர் ‘அராஜகம் பத்தல பத்தல’ பாடலுடன் காதல், கல்லூரி வாழ்க்கை, மோதல், கொண்டாட்டம் என இளமைக்கே உரிய பல்வேறு தருணங்கள் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன. இதில் பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இருவரும் வெவ்வேறு கதாபாத்திரத் தோற்றங்களில் தோன்றுவது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இளைஞர்களை கவரும் வகையில், காமெடி மற்றும் என்டர்டெயின்மென்ட் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ராவடி’ உருவாகியுள்ளது. கலகலப்பான சம்பவங்கள், நகைச்சுவை காட்சிகள், இளமை துள்ளல் மற்றும் வேகமான திரைக்கதை என முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, ஒகேனக்கல் பகுதிகளின் இயற்கை எழிலை பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் படத்திற்கு தனித்துவமான விஷுவல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமாருடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை லியோன் பிரிட்டோ மேற்கொண்டுள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் மேற்கொண்டுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே வெளியான ‘ராவடி’ படத்தின் டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோவும், டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.