ராஷ்மிகா மந்தனாவின் திரைப்பயணத்தில் இதுவரை அவர் ஏற்றிராத அளவுக்கு சவால் நிறைந்த கதாபாத்திரமாக உருவாகி வருகிறது ‘மைசா’ திரைப்படம். கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக இப்படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பையும், மனநிலையையும் திரையில் பிரதிபலிக்க உடல் ரீதியாகவும், நடிப்பு ரீதியாகவும் தீவிரமான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, ‘மைசா’ திரைப்படம் 2026 நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வெளியீட்டு தேதியை அறிவிக்கும் புதிய போஸ்டரில், கையில் நீண்ட ஈட்டியுடன் வீரத்துடன் நிற்கிறார் ராஷ்மிகா மந்தனா. போரில் காயமடைந்ததைப் பிரதிபலிக்கும் வகையில் முகத்தில் காயங்களுடன் காணப்படும் அவர், பின்னணியில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம் மற்றும் கொழுந்துவிட்டு எரியும் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பழங்குடியின பாரம்பரிய உடைகள், ஆயுதங்கள், தீக்காட்சிகள் என போஸ்டர் முழுவதும் ஒரு வலிமையான வரலாற்றுப் பின்னணியையும், போராட்ட உணர்வையும் வெளிப்படுத்துகிறது.
பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘மைசா’, அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளின் மூலம் இந்திய சினிமாவில் புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரைப்படங்களின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி, இந்திய சினிமாவின் ஆக்ஷன் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் படத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
படப்பிடிப்பின்போது கடினமான ஆக்ஷன் காட்சியில் நடித்த ராஷ்மிகாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வரும் அவர், முழுமையாக குணமடைந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மறுபுறம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. படத்தின் பிரம்மாண்ட உலகை திரையில் உருவாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், காட்சிகளின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உருவாக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் ஆண்டி லாங் முக்கிய ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், கேச்சா காம்பாக்டீ ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்கிறார்.
பிரம்மாண்டமான ஆக்ஷன், பழங்குடியினப் பின்னணி மற்றும் ராஷ்மிகாவின் இதுவரை பார்த்திராத அவதாரம் என பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ‘மைசா’, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில், 2026 நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





