ஃபஹத் ஃபாஸில் – சாரா பலேகர் கூட்டணியில் கலகலப்பான ஃபேண்டஸி சாகசம்!

எஸ்.எஸ். ராஜமவுலி வழங்கும் புதிய ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தில் ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் ஆகியோர் முறையே சூரி மற்றும் திவ்யா என்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை, ஃபேண்டஸி மற்றும் சாகசம் ஆகிய அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர், ஃபேண்டஸி உலகை பிரதிபலிக்கும் வண்ணமயமான பின்னணியில் கதையின் நாயகன் மற்றும் நாயகியை இடம்பெறச் செய்துள்ளது. இதன் மூலம் படத்தில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் மாயாஜாலம் நிறைந்த உலகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் படக்குழுவினர் அதிகரித்துள்ளனர்.

ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், அதில் இடம்பெற்றிருந்த வித்தியாசமான ஃபேண்டஸி உலகமும், சுவாரஸ்யமான கதைக்களமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

வழக்கமான கதைக்களத்திலிருந்து மாறுபட்ட ஃபேண்டஸி பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் தனித்துவமான உலகம், காட்சியமைப்பு மற்றும் சாகச அம்சங்கள் படத்தின் முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இசையமைப்பாளர் கால பைரவா இசையில் உருவாகியுள்ள ‘கேக்கு வாக்கு’ (Cakeu Walku) என்ற பாடலையும் படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். கலகலப்பான இசையமைப்புடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’, வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களை மாயாஜாலம் நிறைந்த ஃபேண்டஸி சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளது.