GM Morgan Films தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. தமிழ் சினிமாவில் வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்டு, ஃபேண்டஸி, ஹாரர் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் அம்சங்களை இணைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கனவில் மட்டுமே சாத்தியமாகும் விசித்திரமான நிகழ்வுகள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்ன மாதிரியான அனுபவமாக இருக்கும் என்ற வித்தியாசமான கற்பனையை மையமாக வைத்து ‘ட்ரோன்ஸ்’ படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி என பல வித்தியாசமான கதாபாத்திரங்களுடன், மர்மங்களும் எதிர்பாராத சம்பவங்களும் நிறைந்த ஒரு கற்பனை உலகத்திற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.
வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் தனித்துவமான களத்தை வெவ்வேறு கோணங்களில் பிரதிபலிக்கின்றன. முதல் போஸ்டரில் அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மம் நிறைந்த கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுடன் கதாநாயகி இடம்பெற்றுள்ளார். இந்த போஸ்டர் ஒரு மாயாஜால உலகத்தின் பின்னணியை உருவாக்குகிறது.
இரண்டாவது போஸ்டரில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதுடன், ட்ரோன், மர்மமான வயதான பெண் மற்றும் வித்தியாசமான தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த கதைக்களம் இருப்பது தெரியவருகிறது.
மூன்றாவது போஸ்டர் முற்றிலும் திகில் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஏராளமான பொம்மைகள் நிறைந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்துடன் காணப்படும் சூனியக்காரியின் உருவம், படத்தின் ஹாரர் அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு மூன்று போஸ்டர்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட காட்சியமைப்பையும் மனநிலையையும் வெளிப்படுத்துவதோடு, படத்தின் கதைக்குள் பல்வேறு அடுக்குகள் இருப்பதையும் உணர்த்துகின்றன. இதனால் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் தேவதர்ஷினி, ‘பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஆர்ஜே தீபக் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
‘ட்ரோன்ஸ்’ படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதுமையான முயற்சிகள் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்துள்ளார். படத்தின் வித்தியாசமான கதை மற்றும் உருவாக்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இப்படத்தின் முழு உரிமையையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தைப் பார்த்தவுடன் முழு உரிமையையும் வாங்கியிருப்பது, இப்படத்தின் மீது விநியோகஸ்தர் தரப்பில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தற்போது ‘ட்ரோன்ஸ்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் சர்ரியலிஸ்ட் கற்பனை என பல்வேறு அம்சங்களை ஒரே கதைக்களத்தில் இணைத்து உருவாகி வரும் ‘ட்ரோன்ஸ்’, தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான திரையனுபவத்தை வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





