“ஒன்ஸ்மோர்” திரை விமர்சனம்

“ஒன்ஸ்மோர்” விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் யுவராஜ் கணேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை ஹிஷாம் அப்துல் வஹாப். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிங்கல், திராவிட் செல்வம், அனுஷா பிரபு, சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காதல் தோல்வியால் சோகமும் விரக்தியும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸை, அதிதி சங்கர் காதலிக்கிறார். முதலில் அவரது காதலை ஏற்க மறுக்கும் அர்ஜுன் தாஸ், அதிதியின் விடாமுயற்சியால் மனம் மாறி அவரை காதலிக்கத் தொடங்குகிறார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில், நிச்சயதார்த்தத்தின் போது அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலி சோனா ஒலிக்கல், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை தொடர்புகொண்டு சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்.

முன்னாள் காதலியை சந்திக்கும் அர்ஜுன் தாஸ், எதிர்பாராத தகவல் ஒன்றைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார். அவர் தன்னை பிரிந்து சென்றதற்கான காரணம் என்ன? அந்த சந்திப்புக்குப் பிறகு அர்ஜுன் தாஸின் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படுகிறது? என்பதே ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் கதை.

வழக்கம் போல் இறுக்கமான முகபாவனையுடன் வலம் வரும் அர்ஜுன் தாஸ், இந்தப் படத்திலும் சோகமும் விரக்தியும் நிறைந்த கதாபாத்திரமாகவே அதிகம் பயணிக்கிறார். முதல் பாதியில் கதாபாத்திரத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் சோகமாக காணப்படும் அவர், இரண்டாம் பாதியில் ரொமாண்டிக் ஹீரோவாக மாறினாலும், அவரது முகத்தில் இருக்கும் அமைதியும் சோகமும் முழுமையாக விலகவில்லை.

அதிதி சங்கர் தனது துடிப்பான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நாயகனை காதலிக்கும் கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக கையாண்டிருக்கிறார். அவரது உடல்மொழியும், இயல்பான நடிப்பும் படத்தின் பலமாக அமைகின்றன.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சோனா ஒலிக்கலுக்கு பெரிதாக நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. அவர் ஏன் அர்ஜுன் தாஸை காதலித்தார், எதற்காக அவரை பிரிந்தார், மீண்டும் எதற்காக அவரை சந்திக்கிறார் என்பதற்கான காரணங்கள் திரைக்கதையில் அழுத்தமாக பதிவு செய்யப்படாததால், அவரது கதாபாத்திரம் படத்துடன் முழுமையாக ஒன்றவில்லை.

டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், அருண்குமார் மணி, செளந்தர்யா மனோகரன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு எளிமையாக உள்ளது. ஆனால், படத்தின் பெரும்பாலான காட்சிகள் நாயகனின் சோகமான மனநிலையைப் போலவே சற்று பொலிவிழந்த உணர்வை ஏற்படுத்துகின்றன.

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, தொய்வாக நகரும் திரைக்கதையால் சோர்வடையும் நேரங்களில் பாடல்கள் சற்று புத்துணர்ச்சி அளிக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு தேவையான உணர்வை கொடுக்கிறது.

முதல் பாதியில் நாயகியின் காதலும், இரண்டாம் பாதியில் நாயகனின் காதலும் என கதை பயணிக்கிறது. ஆனால், இந்த இரண்டு காதல் பகுதிகளையும் சுவாரஸ்யமாகவும், மனதைத் தொடும் வகையிலும் இணைக்க படத்தொகுப்பு தவறிவிட்டது. குறிப்பாக இரண்டாம் பாதியில் காதல் மற்றும் காதல் ஜோடியின் பிரிவு ஆகியவை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

நாம் ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்துப் பழகிய காதல் கதையை, உணர்வுப்பூர்வமாகவும் ரசிக்கும்படியும் வழங்கியிருக்க வேண்டியது இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தின் முக்கிய பொறுப்பு. ஆனால், திரைக்கதையில் அழுத்தமான உணர்வுகளும், எதிர்பாராத திருப்பங்களும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய பலவீனமாகிறது.

அதிதி சங்கரின் துருதுருப்பான நடிப்பும், அர்ஜுன் தாஸின் இறுக்கமான மனநிலையும், முன்னாள் காதலியின் பிளாஷ்பேக்கில் ஏதோ வலுவான காரணம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி முதல் பாதியை ஓரளவு சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இரண்டாம் பாதி அமையவில்லை.

“ஒன்ஸ்மோர்” படத்திற்கு மதிப்பீடு 2.5/5

“ஒன்ஸ்மோர்” பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கத் தவறுகிறது.