“இதயம் முரளி” திரை விமர்சனம்

“இதயம் முரளி” ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரன், கிருஷ்ணா சந்தர் இளங்கோ, தீபன் பூபதி, விக்கிஸ் ஆர்.ஏ., தேவ் ராம்நாத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை எஸ். தமன். இந்த படத்தில் அதர்வா முரளி, ஃபஹத் பாசில், பிரீத்தி முகுந்தன், காயடு லோஹர், (நட்டி) நடராஜன் சுப்ரமணியம், எஸ். தமன், லாரா டொமினிக்காக, மாலவிகா மோகனன், வி.ஜே. ரக்ஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முதல் காதல் தோல்வியில் முடிந்தால், அதிலிருந்து மீள்வதற்கான வழி இன்னொரு காதல் என்ற கொள்கையுடன் வாழ்க்கையை நகர்த்தும் இளைஞன் முரளி (அதர்வா). ஒவ்வொரு காதலும் தோல்வியில் முடிவதால், இறுதியில் குடும்பத்தினர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மனைவியையே காதலிக்க முடிவு செய்கிறார். அந்த முடிவு அவருக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுத்ததா? அவரது தொடர் காதல் தோல்விகளுக்குப் பின்னால் என்ன காரணம்? என்பதையே நகைச்சுவையும் காதலும் கலந்த திரைக்கதையாக சொல்ல முயற்சிக்கிறது ‘இதயம் முரளி’.

ஒருதலைக் காதலின் வலியை உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்த ‘இதயம்’ படத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பல காதல் தோல்விகளை கலகலப்பாக சொல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

அதர்வா தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டைலிஷ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். உடை, தோற்றம், திரைநேர்த்தி என அனைத்திலும் மாற்றம் தெரிந்தாலும், நடிப்பில் பெரிய புதுமை இல்லாமல் வழக்கமான பாணியிலேயே பயணிக்கிறார். இருப்பினும் காதல் காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

நாயகிகளாக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர், தங்களது இயல்பான திரை ஆளுமை மற்றும் அழகான வெளிப்பாட்டால் காதல் காட்சிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறார்கள்.

அதர்வாவின் மாமா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்டி நட்ராஜ், தனது வழக்கமான போலீஸ் கதாபாத்திரங்களைத் தாண்டி வித்தியாசமான தோற்றத்தில் மனதில் பதிகிறார். அவரது இயல்பான நடிப்பும் நகைச்சுவை கலந்த வசனங்களும் ரசிக்க வைக்கின்றன.

தமன்.எஸ், நிஹாரிகா, ரக்‌ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாள்ந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறார். வண்ணமயமான காட்சிகளும், பிரமாண்டமான ஃபிரேம்களும் ஒவ்வொரு காட்சியையும் கண்களுக்கு விருந்தாக மாற்றுகின்றன. திரைக்கதையில் குறைவாக இருக்கும் ஈர்ப்பை தனது காட்சிப்பதிவின் மூலம் ஈடு செய்கிறார்.

தமன்.எஸ் இசையில் பாடல்கள் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் இருந்தாலும், நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் மெட்டுகள் இல்லை. பின்னணி இசையும் சில இடங்களில் காட்சிகளை விட அதிகமாக ஒலித்து தாக்கத்தை குறைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், படத்தின் வேகத்தை சீராக வைத்திருக்க முயற்சித்துள்ளார். வசனங்களில் சில இடங்களில் நகைச்சுவை எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், பல காதல் தோல்விகளை மையமாகக் கொண்ட பழக்கமான கதையை வித்தியாசமான காட்சிப்படுத்தலுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார். திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம் என்ற உணர்வு இருந்தாலும், காட்சியமைப்பு, வண்ணமயமான திரைமொழி மற்றும் லைட்டான பொழுதுபோக்கு அம்சங்களால் படத்தை ரசிக்கக்கூடிய அனுபவமாக மாற்றியிருக்கிறார்.

“இதயம் முரளி” படத்திற்கு மதிப்பீடு 3/5

கண் கவரும் காதல் பயணம்