“டிசி” அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர். இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், வமிகா கப்பி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சூழ்நிலையின் கட்டாயத்தால் குற்ற உலகில் சிக்கி, சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் லோகேஷ் கனகராஜ், வெளியே வந்த பிறகும் காவல்துறையின் தொடர் துரத்தலிலிருந்து தப்பிக்க முடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். அந்தப் பயணத்தில் சஞ்சனா ஏ.கே என்ற பெண்ணை சந்திப்பது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைகிறது. ஆனால், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழக்க, மீண்டும் தனிமையில் தவிக்கும் தேவதாஸ், வாழ்க்கையால் சிதைக்கப்பட்ட வாமிகா கபியை சந்திக்கிறார்.
அவளது வேதனையை உணர்ந்து, நரக வாழ்க்கையிலிருந்து மீட்கும் தேவதாஸ், அதன் பிறகு வாமிகாவுடன் புதிய பயணத்தை தொடங்குகிறார். ஆனால், தன்னை சீரழித்த மருத்துவரை வாமிகா கொலை செய்வதால் இருவரும் காவல்துறையின் தேடுதல் பட்டியலில் இடம் பெறுகின்றனர். போலீஸ் மற்றும் குற்ற உலகம் என இரு தரப்பினரிடமிருந்தும் தப்பிக்க முயலும் இவர்களின் பயணம் எங்கு முடிகிறது என்பதே ‘டிசி’ திரைப்படத்தின் மையக்கதை.
போலீசின் அதிகார துஷ்பிரயோகத்தையும், அதற்கு எதிராக எழும் ஒரு மனிதனின் கோபத்தையும் மையமாகக் கொண்டு, வன்முறையும் உணர்ச்சியும் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கதையை நகர்த்தியுள்ளார். வழக்கமான பழிவாங்கும் கதையாக இல்லாமல், ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பை தனது தனித்துவமான காட்சியமைப்பில் சொல்ல முயற்சித்திருப்பது படத்தின் பலமாக இருக்கிறது.
நாயகனாக அறிமுகமாகியுள்ள லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் கதாபாத்திரத்திற்கு இயல்பாக பொருந்தியுள்ளார். நடிப்பில் பெரிய வெளிப்பாடுகள் இல்லாவிட்டாலும், ஆக்ஷன் காட்சிகளில் தன்னம்பிக்கையுடன் திரையை ஆக்கிரமிக்கிறார். முதல் படத்திலேயே கதாபாத்திரத்திற்கு தேவையான உடல்மொழியை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாமிகா கபி, வாழ்க்கையால் நசுக்கப்பட்ட பெண்ணின் வலியையும் மனநிலையையும் சிறப்பாக பிரதிபலிக்கிறார். சஞ்சனா ஏ.கே. குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும், அவரது கதாபாத்திரம் உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி., தனது கேமரா மொழியின் மூலம் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியையும் ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தியுள்ளார். வித்தியாசமான ஃபிரேம்கள் மற்றும் கேமரா நகர்வுகள் படத்தின் வன்முறை உலகை அழகியல் கலந்த முறையில் வெளிப்படுத்துகின்றன.
அனிருத்தின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகிறது. திரையில் ஓடும் ஒவ்வொரு சண்டைக் காட்சிக்கும் அவரது இசை கூடுதல் உயிரூட்டுகிறது. பல இடங்களில் காட்சிகளை விட பின்னணி இசையே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
படத்தொகுப்பாளர் ஜி.கே. பிரசன்னா, வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தாலும் அவை சலிப்பை ஏற்படுத்தாத வகையில் வேகமான தொகுப்பை வழங்கியுள்ளார்.
அருண் மாதேஸ்வரனின் முந்தைய படைப்புகளைப் போலவே, ‘டிசி’யிலும் இரத்தமும் வன்முறையும் பிரதான இடம் பெற்றுள்ளன. இருப்பினும், தேவதாஸ் – சந்திரா இடையேயான காதல் தருணங்கள், கதைக்கு தேவையான உணர்ச்சிப்பூர்வமான சமநிலையை ஏற்படுத்துகின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பும், அதிகாரத்தின் அடக்குமுறையும் குறித்த தனது கருத்தை வலுவாக பதிவு செய்திருக்கும் இயக்குநர், அதை முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் வடிவில் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், “டிசி” ஸ்டைலான ஆக்ஷன், அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை மற்றும் அருண் மாதேஸ்வரனின் தனித்துவமான காட்சியமைப்பால் கவனம் ஈர்க்கும் வன்முறை திரைப்பயணம்.
“டிசி” படத்திற்கு மதிப்பீடு 3.5/5
ரத்தம் தெறிக்கும் ஆக்ஷனுடன் மிரட்டும் மாஸ் திரைப்படம்





