கலையும், அரசியலும் கைகோர்த்தால் சமூக மாற்றத்தை விதைக்க முடியும் என்ற கருத்தை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த ‘பேட்டில்’.
ராப் பாடகராக ஜெயிக்கத் துடிக்கும் அர்ஜுன் பிரபாகரன், பள்ளி ஆசிரியை ஆராத்யா இருவரும் காதலர்கள். அர்ஜுன் தனது லட்சியத்தில் வெற்றி பெற்று பெரிய இடத்திற்குச் செல்லும் நேரத்தில், ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் ஒரு மிகப்பெரிய கல்வி மோசடி அரங்கேறுகிறது. இதில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்ள, அந்தப் பள்ளியின் முகத்திரையைக் கிழிக்கத் தனது ராப் இசையை ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்கிறார் அர்ஜுன்.
ஆனால், இசை நிறுவனத்தின் மிரட்டல்களும், பள்ளித் தலைவர் சுப்பிரமணிய சிவாவின் கொலைவெறித் தாக்குதல்களும் குறுக்கே நிற்கின்றன. இந்தச் சவால்களைக் கடந்து, இந்தக் காதல் ஜோடி நீதியை வென்றெடுத்ததா? என்பதே ‘பேட்டில்’ சொல்லும் கதை.
அறிமுக நாயகனான அர்ஜுன் பிரபாகரன், கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருந்தாலும் நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக, ராப் பாடல்களின் போது தேவைப்படும் அந்த ‘எனர்ஜி’ மற்றும் உடல்மொழியில் சற்றுத் தடுமாற்றம் தெரிகிறது.
நாயகி ஆராத்யா தனது அழகான நடிப்பால் கவர்கிறார். கதைக்குத் தேவையான பலத்தைத் தனது பங்களிப்பின் மூலம் சரியாகக் கொடுத்திருக்கிறார்.
வில்லனாக சுப்பிரமணிய சிவா வழக்கம் போல் மிரட்டுகிறார். சரவண சுப்பையா, முனிஷ்காந்த், சுருளி என மற்ற நடிகர்கள் தங்களுக்குக் கொடுத்த வேலையை நேர்த்தியாகச் செய்துள்ளனர்.
பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தாலும், நேரடி லொக்கேஷன்களில் படமாக்கி காட்சிகளுக்கு இயல்பான தன்மையைக் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.ஆர்.
கதையின் முதுகெலும்பே இசை தான். ஆனால், இசையமைப்பாளர் ஜீவாவின் பாடல்களும், பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ராப் பாடல்கள் இன்னும் துள்ளலாக இருந்திருக்கலாம்.
காமேஷ்.கே மற்றும் கலை இயக்குநர் இளஞ்செழியன் ஆகியோரது பணிகள் கதைக்குத் தேவையான ஓட்டத்தைக் கொடுக்க உதவியுள்ளன.
கல்வி எப்படி முழுக்க முழுக்க லாபம் ஈட்டும் வணிகமாக மாறியிருக்கிறது என்பதையும், அதில் ஆசிரியர்கள் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் இயக்குநர் நாராயணன்.பி.ஏ தைரியமாகப் பேசியிருக்கிறார். ஒரு சமூகப் பிரச்சனைக்கு ‘கலை’ என்ற ஆயுதம் மூலம் தீர்வு காண முடியும் என்ற அவரது நோக்கம் பாராட்டுக்குரியது. இருப்பினும், படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதில் திரைக்கதை இன்னும் கொஞ்சம் வேகம் எடுத்திருக்கலாம்.
‘பேட்டில்’ – சமூக அக்கறை கொண்ட ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறது. வணிக ரீதியான சுவாரஸ்யங்கள் குறைவாக இருந்தாலும், கல்வியில் நடக்கும் அநீதிகளுக்கு எதிரான ஒரு நேர்மையான போராட்டமாக இந்த ‘பேட்டில்’ அமைகிறது.
சமூக விழிப்புணர்வு மற்றும் புரட்சிகரமான கருத்துக்களை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்





