“சாருகேசி” சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆர். அருண் ராஜேந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தேவா. இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், சத்யராஜ், சமுத்திரகனி, ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பா, தலைவாசல் விஜய், மதுவந்தி அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கர்நாடக இசை உலகில் புகழின் உச்சியை எட்டிய கலைஞரான ஒய்.ஜி. மகேந்திரா, இசையையும் தனது மனைவி சுஹாசினி வாழ்க்கையின் இரு தூண்களாக கருதி வாழ்கிறார். வெளிப்படையாக வெற்றி, புகழ், செல்வம் என அனைத்தையும் பெற்றிருந்தாலும், அவரது குடும்ப வாழ்க்கை பல காயங்களால் நிரம்பியதாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவரது மகன் ராஜ் ஐயப்பன். தந்தையின் நிழலில் வாழ விரும்பாத அவர், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தையிடமிருந்து விலகி நிற்கிறார். அதோடு, பெற்றோருக்கு தெரியாமல் ரம்யா பாண்டியனை திருமணம் செய்து கொள்கிறார்.
மகனின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் சாருகேசி – பத்மா தம்பதியருக்கு, மருமகள் ரம்யா பாண்டியன் எதிர்பாராத அதிர்ச்சியை கொடுக்கிறார். அவர்களது கடந்தகாலத்தைச் சார்ந்த ஒரு ரகசியத்தை கையில் வைத்துக்கொண்டு, பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்குகிறார். ஏற்கனவே மகனின் புறக்கணிப்பால் மனவேதனையில் இருக்கும் சாருகேசியின் வாழ்க்கை அதன் பிறகு எந்த திசையில் செல்கிறது? அந்த ரகசியம் என்ன? என்பதையே உணர்வுப்பூர்வமாகவும் தத்துவார்த்தமாகவும் சொல்லும் படம் “சாருகேசி”.
சாருகேசி கதாபாத்திரத்தில் ஒய்.ஜி. மகேந்திரா அனுபவம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேடைகளில் கைதட்டல்களைப் பெறும் இசை மேதையாகவும், குடும்பத்தில் புறக்கணிக்கப்படும் தந்தையாகவும் இருவிதமான மனநிலைகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். சில காட்சிகளில் நாடகத் தன்மை அதிகமாக தெரிந்தாலும், அவரது அனுபவம் அதை சமநிலைப்படுத்துகிறது.
சுஹாசினி, பத்மா கதாபாத்திரத்திற்கு தேவையான முதிர்ச்சியையும் அமைதியையும் வழங்கியுள்ளார். சில இடங்களில் செயற்கைத்தனம் தோன்றினாலும், அவரது திரைநிலை கதைக்கு உறுதுணையாக அமைகிறது.
ராஜ் ஐயப்பன் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் இளமைத் துடிப்புடன் நடித்துள்ளனர். குறிப்பாக சாருகேசியை எதிர்த்து செயல்படும் அவர்களது நடவடிக்கைகள் கதையில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், தீனா ரித்விக், ப்ரீதிகா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களின் மூலம் திரைக்கதைக்கு தேவையான ஆதரவை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சஞ்சய்.பி.எல், காட்சிகளை எளிமையான கோணங்களில் பதிவு செய்துள்ளார். வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் காட்சியமைப்பில் பெரிய சாகசங்கள் இல்லாமல் படம் நகர்கிறது.
இசையமைப்பாளர் தேவா, கர்நாடக இசை பின்னணியில் இனிமையான இசையை வழங்கியுள்ளார். மெலோடி பாடல்கள் மனதில் நிற்கின்றன. சில பாடல்களில் அவரது பழைய இசையின் சாயல் தெரிந்தாலும், அது ரசிகர்களுக்கு ஒரு இனிய நினைவாக அமைகிறது. பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
படத்தொகுப்பாளர் ரிச்சர்ட், சாருகேசியின் வாழ்க்கைப் பயணத்தை ஒரு நினைவுக் குறிப்பைப் படிப்பது போன்ற உணர்வுடன் தொகுத்துள்ளார்.
பா.விஜயின் வசனங்களும் பாடல்களும் படத்தின் முக்கிய பலமாக அமைகின்றன. இருப்பினும், சில தத்துவ வசனங்களும் வாழ்க்கைப் பாடங்களும் ஏற்கனவே பல படங்களில் பார்த்தது போன்ற உணர்வை தருகின்றன.
சாருகேசி என்ற மனிதனின் போராட்டங்களையும், அவரது நேர்மையான வாழ்க்கை அணுகுமுறையையும் உணர்வுப்பூர்வமாக கையாண்டுள்ளார் இயக்குநர் வெங்கட்.
திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, தன்னம்பிக்கை, பொறுமை மற்றும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை வலியுறுத்தும் படைப்பாக ‘சாருகேசி’யை உருவாக்கியுள்ளார். மேடை நாடகத்தின் ஆதாரத்தை இழக்காமல், மனித உறவுகளின் வலியையும் வெற்றியையும் மையமாக வைத்து பார்வையாளர்களின் மனதில் பதியும் படமாக மாற்றியிருப்பது அவரது வெற்றியாகும்.
“சாருகேசி” படத்திற்கு மதிப்பீடு 3/5
வலி, உறவுகள் மற்றும் வாழ்க்கை தத்துவங்களை இசையோடு இணைத்து சொல்லும் “சாருகேசி”





