“சிங் கீதம்” திரை விமர்சனம்

“சிங் கீதம்” சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் நாக் அஷ்வின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இந்த படத்தில் அயான், அஹில்யா பம்ரூ, ஷாலினி கொண்டேபுடி, துளசி சிவமணி, பானர்ஜி மாகந்தி, சிவன்நாராயணா நரிபெட்டி, ராச்சா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மோசடி வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வெளியே வரும் அயான், குடும்பத்துக்கு சொந்தமான நில ஆவணத்தை கையில் பெறுகிறார். அந்த ஆவணத்தின் மூலம், குபேரபுரம் என்ற தொலைதூர கிராமத்தில் அவர்களுக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார். பாலைவனத்தைப் போன்ற தோற்றமுடைய அந்த ஊரில், இரண்டு தங்கச் சுரங்கங்களை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சென்ற பிறகே, அந்த சுரங்கங்களில் ஒன்றின் உரிமையாளராக இருந்தவர் தனது தந்தை என்பதும் அயானுக்கு தெரியவருகிறது.

நிலத்தை விற்று பணம் பெற்றவுடன் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அயானின் திட்டத்தை தலைகீழாக மாற்றும் சம்பவம் ஒன்று நடக்கிறது. அதன் விளைவாக, அந்த ஊரில் வாழும் அனைவரும் சாதாரணமாக பேச வேண்டிய வார்த்தைகளையே பாடலாகப் பாடும் விசித்திரமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, அதிகாலையில் கூவும் சேவலும் இசை வடிவிலேயே தனது குரலை வெளிப்படுத்துகிறது. இதை குபேர கடவுளின் சாபம் என நம்பும் கிராம மக்கள், அந்த சாபத்திலிருந்து மீண்டார்களா? அயான் தனது நோக்கத்தை நிறைவேற்றினாரா? என்பதைக் கற்பனை கலந்த ஃபேண்டஸி பாணியில் சொல்லும் படமே ‘சிங் கீதம்’.

உரையாடல்களே இல்லாத ‘பேசும் படம்’ மூலம் இந்திய சினிமாவில் தனித்துவம் காட்டிய இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், இந்த முறை எல்லா உரையாடல்களையும் பாடல்களாக மாற்றும் புதுமையான முயற்சியை கையாண்டுள்ளார். வழக்கமான சினிமா வடிவத்தைத் தாண்டி, இசையையே கதையின் மொழியாக பயன்படுத்தியிருப்பது படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.

புதுமையான யோசனையை திரையில் சுவாரஸ்யமாக கொண்டு வந்திருக்கும் இயக்குநர், மனிதனின் பேராசையால் இயற்கை எவ்வாறு சீரழிகிறது என்பதையும், அதன் விளைவுகளை எதிர்காலம் எப்படி சந்திக்க நேரிடும் என்பதையும் அழகான காட்சிகளின் மூலம் சிந்திக்க வைக்கிறார். ஃபேண்டஸி அம்சங்களுக்குள் சமூகப் பொறுப்புணர்வையும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.

நாயகனாக நடித்துள்ள அயான், ஆரம்பத்தில் நகைச்சுவை கலந்த இலகுவான நடிப்பை வழங்கினாலும், உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்துள்ளார்.

இயற்கையை பாதுகாக்க போராடும் கெளரியாக நடித்துள்ள அஹல்யா பம்ரூ, தன்னுடைய இயல்பான நடிப்பாலும் துடிப்பான திரைநிகழ்வாலும் கவனம் ஈர்க்கிறார். தங்கச் சுரங்க உரிமையாளராக வரும் ஷாலினி கொண்டேபூடி, அளவான நடிப்பு மற்றும் முகபாவனைகளால் கதாபாத்திரத்தை அழகாக சுமந்திருக்கிறார்.

சைலஜம்மாவாக நடித்துள்ள நிவேதா பெத்துராஜ், அயானின் தந்தையாக நடித்துள்ள ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோரும் தங்களுக்கான இடத்தை சிறப்பாகப் பதிவு செய்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் தேவரகொண்டாவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தோன்றுகிறார்.

“சிங் கீதம்” படத்திற்கு மதிப்பீடு 3/5

வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் ஃபேண்டஸி படம்.