“மம்மட்டியான் ஸ்டார்ஸ்” சவீர் சுதாகர் இயக்கத்தில் எஸ். சிங்காரவேலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பரத் தனசேகர். இந்த படத்தில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, விவேக் பிரசன்னா, நான் கடவுள் ராஜேந்திரன், சம்பத் ராம், கஜகபர் சாதிக், சரத் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கிராமத்தைச் சேர்ந்த மூன்று நெருங்கிய நண்பர்களான வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் கிரிக்கெட்டின் மீது அளவுகடந்த ஆர்வம் கொண்டவர்கள். குறிப்பாக இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரமான எம்.எஸ். வீர் சிங்கின் தீவிர ரசிகர்களாக இருக்கும் அவர்கள், ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற அணியை வழிநடத்தி பல உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். தங்களது அபிமான வீரர் விளையாடும் கடைசி போட்டியை நேரில் காண வேண்டும் என்பதே அவர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கிறது.
அந்த கனவை நிறைவேற்ற, கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையைப் பெற்று சென்னை செல்ல திட்டமிடுகிறார்கள். ஆனால், ஊர் தலைவரின் திடீர் மரணத்தால் இறுதிப்போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, பரிசுத் தொகையை சட்டவிரோதமாக எடுத்துக்கொண்டு போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் சென்னை செல்லும் நண்பர்களுடன், வைபவின் முன்னாள் காதலியான லாவண்யா அன்பழகனும் பயணிக்கிறார்.
சென்னை சென்ற பிறகே தங்களிடம் இருக்கும் டிக்கெட்டுகள் போலியானவை என்பது தெரியவர, நண்பர்கள் பெரும் அதிர்ச்சியடைகிறார்கள். இருப்பினும் எப்படியாவது தங்களது அபிமான வீரரின் கடைசி போட்டியை நேரில் காண வேண்டும் என்ற உறுதியுடன், புதிய டிக்கெட் வாங்க பணம் திரட்ட பல்வேறு முயற்சிகளில் இறங்குகிறார்கள். அந்த முயற்சிகள் அவர்களை எதிர்பாராத சிக்கல்களிலும் சாகசங்களிலும் இழுத்துச் செல்கின்றன. இறுதியில் அவர்கள் கனவு நனவானதா என்பதை ஆறு அத்தியாயங்களாக சுவாரஸ்யமாக சொல்லுகிறது ‘மம்மட்டியான் பாய்ஸ்’.
கிரிக்கெட் ரசிகர்களின் வெறித்தனமான ஈடுபாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடரில், ஒரு நட்சத்திரத்தை நேசிப்பது வேறு, அதில் அளவுக்கு மீறிய பித்துப்பிடிப்பது வேறு என்ற கருத்தை நகைச்சுவையும் உணர்வும் கலந்த முறையில் பதிவு செய்துள்ளனர். அதேசமயம், கிரிக்கெட்டின் நுணுக்கங்கள், ரசிகர்களின் மனநிலை மற்றும் போட்டிகளைச் சுற்றியுள்ள சூதாட்ட உலகம் போன்ற அம்சங்களும் கதையில் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளன.
வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் நண்பர்களின் உறவை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது உடல்மொழி, நகைச்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் சண்டைக் காட்சிகள் அனைத்தும் கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மை சேர்க்கின்றன.
முன்னாள் காதலியாக வரும் லாவண்யா அன்பழகன், இன்றைய சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் கட்டுப்பாடுகளையும், அவர்களின் மனநிலையையும் இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு உறுதுணையாக அமைகின்றன.
ஒளிப்பதிவாளர் பி.எம். ராஜ்குமார், கிராம வாழ்க்கையையும் நகர சூழலையும் தனித்துவமாக காட்சிப்படுத்தி, கதையின் பயணத்திற்கு காட்சியழகை சேர்த்துள்ளார். இசையமைப்பாளர் பரத் தனசேகரின் பின்னணி இசை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தனித்துவமான உணர்வை உருவாக்கி, கதையின் விறுவிறுப்பை மேலும் உயர்த்துகிறது.





