பிரேக்ஃபாஸ்ட் விமர்சனம்

அவசரக்காலக் காதலும், அதைவிட வேப்பங்காயாய் கசக்கும் மணவாழ்க்கையும் தான் இந்த ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் மையக்கரு.

தொழிலதிபரின் மகள் ரோஸ்மின், வேலை தேடி அலையும் கிராமத்து இளைஞன் ராணவ்வுக்குத் தன் நிறுவனத்திலேயே வேலை தருகிறார். நட்பு காதலாகி, தந்தையின் எதிர்ப்பையும் மீறி திருமணத்தில் முடிகிறது. கணவனைத் தன் நிறுவனத்தின் ‘நிர்வாக இயக்குநர்’ ஆக்கி அழகு பார்க்கிறார் ரோஸ்மின். ஆனால், அந்த அந்தஸ்து அவர்களுக்குள் அன்பைப் பெருக்கவில்லை; மாறாக, மோதலையும் வெறுப்பையுமே பரிசாகத் தருகிறது. காதலித்த வேகத்தை விட அதிக வேகத்தில் பிரியத் துடிக்கும் இந்த ஜோடி, மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

பிக் பாஸ் புகழ் ராணவ், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞனாகட்டும், மனைவியின் பணத்திமிரால் காயப்படும் கணவனாகட்டும் – நடிப்பில் ஒரு நேர்த்தி தெரிகிறது.

ரோஸ்மின்: அறிமுக நடிகை என்ற சுவடு தெரியாத அளவு அழுத்தமான நடிப்பு.. மற்றவர்களை மதிக்காத குணம், அதிகாரத் தோரணை எனத் தனது கதாபாத்திரத்தின் மூலம் ஆண்களுக்கு ஒருவித ‘அச்சத்தை’ மூட்டுகிறார்.

கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத் ஜோடி திரைக்கதைக்குத் துள்ளல் சேர்க்கிறார்கள். அனுபவ நடிகர்களான சம்பத் ராஜ், கஸ்தூரி, மற்றும் அர்ச்சனா ஆகியோர் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர்.

எம்.வி.பன்னீர் செல்வத்தின் கேமரா கண்கள் திரையை வண்ணமயமாகவும், குளிர்ச்சியாகவும் காட்டியுள்ளன.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி – எதிர்பார்த்த மேஜிக் நிகழவில்லை என்பது சற்று ஏமாற்றமே.

கதாபாத்திரங்களின் உணர்வுகளைச் சிதறாமல் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததில் எடிட்டர்கள் பாஸ்கர் மற்றும் சுஜித் வெற்றி பெற்றுள்ளனர்.

இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, இன்றைய காலத்து ‘இன்ஸ்டன்ட்’ காதல் மற்றும் பிரிவுகளைப் பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார். தம்பதிகளுக்கு இடையேயான பிரிவுக்கு அவர் சொல்லும் காரணம் பழையதாக இருந்தாலும், வசனங்கள் மற்றும் அறிவுரை சார்ந்த காட்சிகள் பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்கின்றன. இருப்பினும், திரைக்கதையை இன்னும் வேகமாகவும், சுவாரசியமாகவும் கையாண்டிருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால். ‘பிரேக்ஃபாஸ்ட்’ – இன்றைய காலத்துத் தம்பதியினர் அவசியம் கவனிக்க வேண்டிய சில பாடங்களை உள்ளடக்கியிருக்கிறது. சில குறைகள் இருந்தாலும், பிரிவைப் பற்றி யோசிப்பவர்களை மீண்டும் இணையச் சொல்லும் ஒரு முயற்சி!

தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் ஒருமுறை பார்க்கலாம்