“மீசைய முறுக்கு 2” திரை விமர்சனம்

“மீசைய முறுக்கு 2” ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் (அவ்னி மூவிஸ் & பென்ஸ் மீடியா) தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஹிப்ஹாப் தமிழா ஆதி. இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், யோகி பாபு, நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன், ஷா ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கானா இசையை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே சுருக்கிவிடாமல், அதை பல்வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. அவரது முயற்சிக்கு கிடைக்கும் தடைகள், அதே கனவை அடுத்த தலைமுறையும் தொடர்வது என கதை மூன்று தலைமுறைகளைக் கடந்து பயணிக்கிறது. குடும்ப சூழல் மற்றும் வாழ்க்கைச் சிக்கல்களால் அந்தக் கனவு தொடர்ந்து தடைபடுகிறது. இறுதியில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த ஆதி, தனது முன்னோர்களைப் போலவே தோல்வியை சந்தித்தாரா அல்லது இசை உலகில் தனக்கான இடத்தை பிடித்தாரா என்பதே ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் கதை.

இளைஞர்களை கவரும் வகையில் ஜாலியான திரைக்கதையுடன் கதையை நகர்த்தியிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. தனது தம்பிகள், தங்கைகள் என இளம் தலைமுறையினருக்கு அவ்வப்போது அறிவுரைகளை வழங்கும் கதாபாத்திரமாகவும், அவர்களுடன் இணைந்து கொண்டாட்ட மனநிலையில் பயணிக்கும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆட்டம், பாட்டம், நகைச்சுவை என படம் முழுவதும் உற்சாகமான பாணியில் வலம் வரும் ஆதி, இடையிடையே கருத்துகளையும் பேசுகிறார்.

குறிப்பாக, சென்னை கானா இசைக் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை கதையின் முக்கிய அம்சமாக முன்னிறுத்தியிருப்பது கவனம் பெறுகிறது. வடசென்னை மக்களின் வாழ்க்கை மற்றும் கானா கலாசாரத்துடன் கதாநாயகனின் பயணத்தை இணைத்து ரசிகர்களை கவர இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.

சைத்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் என மூன்று வெவ்வேறு காலகட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மூவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் இயல்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஆதியின் நண்பராக வரும் ஹர்சத் கான் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது அனுபவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் படத்தை தொடக்கம் முதல் இறுதி வரை வண்ணமயமாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, மூன்று வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியை காட்சிகளின் மூலம் வேறுபடுத்திக் காட்டியிருப்பது சிறப்பு.

ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு துணை நிற்கிறது. இயக்குநர் கொடுத்திருக்கும் பல்வேறு காட்சிகளை தேவையற்ற தொய்வு இல்லாமல் இணைத்து, படத்தை சீராக நகர்த்தியிருக்கிறார்.

படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்துள்ள ஹிப்ஹாப் ஆதி, இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் பாடல்களையும் இசைக் காட்சிகளையும் உருவாக்கியுள்ளார். அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் இடம்பெற்றிருப்பதால், படம் ஒரு இசை நிகழ்ச்சி போன்ற உணர்வை அவ்வப்போது ஏற்படுத்துகிறது. ஆனால், இரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்களின் வரிகள் மற்றும் இசை ரசிகர்களை முழுமையாக சென்றடையாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கிளைமாக்ஸ் பாடல், அதன் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.

முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த இளைஞர்கள், இசை, காதல், கனவு என்ற அடிப்படை அம்சங்களை மீண்டும் கையில் எடுத்துள்ள ஹிப்ஹாப் ஆதி, அதனுடன் சென்னை கானா கலைஞர்களுக்கான அங்கீகாரம் என்ற கருத்தையும் இணைத்துள்ளார்.

படம் முழுவதும் ஜாலியான தருணங்களை அதிகமாக வைத்திருப்பதால், சீரியஸான பகுதிகளும் கூட லேசான மனநிலையிலேயே கடந்து செல்கின்றன. அதேசமயம், முதல் பாகத்தின் கதையோட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் சில காட்சிகள் அமைந்திருப்பது புதுமை குறைந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

‘மீசைய முறுக்கு 2’ படத்தில் புதுமையான கதை சொல்லலை எதிர்பார்க்காமல், பாடல்கள், நடனம், நகைச்சுவை மற்றும் இளைஞர்களை கவரும் கொண்டாட்டமான காட்சிகளுக்காக படம் பார்ப்பவர்களுக்கு பொழுதுபோக்கை வழங்குகிறது. முதல் பாகத்தின் சாயல் அதிகமாக இருப்பதும், பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காததும் குறையாக இருந்தாலும், தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் பல அம்சங்களை வைத்து ஹிப்ஹாப் ஆதி மீண்டும் ஒரு முறை ‘மீசைய முறுக்கியிருக்கிறார்’.

“மீசைய முறுக்கு 2” படத்திற்கு மதிப்பீடு 3/5

“குறைகள் இருந்தாலும், இளைஞர்களை கொண்டாட வைக்கும் ஜாலியான இசைப் பயணம்!”