“போட்டோகிராபர்” அஷ்ரப் அலி இயக்கி நடித்துள்ள இந்த படத்தை அப்துல் பாசித் சையத் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசை ராஜ்குமார் சந்திரசேகரன். இந்த படத்தில் அஷ்ரப் அலி, ஜனனி சமந்தனம், கருணாகரன், தேவி மகேஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு மர்மமான வனப்பகுதியை பின்னணியாகக் கொண்டு, உயிர் பிழைப்புக்கான போராட்டம், உளவியல் திகில் மற்றும் மனித மனத்தின் பயணத்தை இணைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘போட்டோகிராபர்’.
அரிய மரம் ஒன்றை புகைப்படம் எடுக்கச் செல்லும் புகைப்படக் கலைஞர் வீரா (அஷ்ரப்), ஆபத்தான வனப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து உயிருடன் வெளியேறுவதற்காக அவர் எதிர்கொள்ளும் மர்மங்களும், அச்சமூட்டும் சம்பவங்களும், மனஅழுத்தங்களும் தான் படத்தின் மையக்கதை.
கதை, திரைக்கதை, இயக்கம் என பல பொறுப்புகளை ஏற்றதுடன், நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப், முதல் படத்திலேயே முழுப் படத்தையும் தனது தோளில் சுமக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பும் கதாபாத்திரமும் சற்றே மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும், இரண்டாம் பாதியில் வெளிப்படுத்தும் உணர்வுகள் பாராட்டைப் பெறுகின்றன.
நாயகியாக வரும் அனனி சுவாமிநாதன், குறைந்த காட்சிகளிலேயே இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். கருணாகரன், உறியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை நேர்த்தியாக கையாண்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத், காட்டின் இயற்கை அழகை சிறப்பாக பதிவு செய்திருந்தாலும், திகில் உணர்வை முழுமையாக உருவாக்க முடியவில்லை. குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ராஜ்குமார் சந்திரசேகரன் இசையில் பின்னணி இசை இரண்டாம் பாதியில் கதைக்கு வலு சேர்க்கிறது. ஆர்.சி. பிரணவ் படத்தொகுப்பில் முதல் பாதி சற்று நீளமாகவும் மெதுவாகவும் நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.
இயக்குநர் அஷ்ரப், உயிர் பிழைப்புக்கான போராட்டத்தையும், உளவியல் தாக்கங்களையும் இணைத்து வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், மந்தமான முதல் பாதியும் முழுமையாக ஈர்க்காத திகில் அம்சங்களும் படத்தின் வேகத்தை பாதிக்கின்றன. அதே நேரத்தில், இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களும் அம்மா–மகன் உணர்வுகளும் படத்தை சுவாரஸ்யமான முடிவுக்கு கொண்டு செல்கின்றன.
“போட்டோகிராபர்” படத்திற்கு மதிப்பீடு 3/5
பொறுமையை சோதித்தாலும், இறுதியில் திருப்தி தரும் சர்வைவல் த்ரில்லர்





