உத்ரா புரொடக்ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. செ. ஹரி உத்ரா கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த திரைப்படம், பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கிணைத்த வித்தியாசமான படைப்பாக உருவாகி வருகிறது.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், மர்ம சக்தி கொண்டதாக தோன்றும் ஒளிரும் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டியும் சிறுவனும் நிற்கின்றனர். அவர்களைச் சுற்றியுள்ள குடும்பத்தினர் பயம், ஆச்சரியம் மற்றும் குழப்பம் கலந்த முகபாவனைகளுடன் அந்தப் பெட்டியை உற்றுநோக்கும் காட்சிகள், கதையின் மையத்தில் இந்த மர்மப் பெட்டி முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்பதை உணர்த்துகின்றன. பழமையான வீடு, சிதறிக்கிடக்கும் பணக்கட்டுகள் மற்றும் துப்பாக்கி போன்ற காட்சிகள், நகைச்சுவையுடன் கூடிய திரில்லர் அனுபவத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
வசதிக்கு மீறிய வாழ்க்கையை நாடும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் எதிர்பாராத சிக்கல்களில் சிக்கிக் கொள்வதும், அதிலிருந்து ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை கலந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களின் பாணியில், பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும் என படக்குழு தெரிவிக்கிறது.
நடிகர் தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான அக்ஷரா ரெட்டி கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.





