அர்ஜுன் தாஸ் – சாண்டி மாஸ்டர் மோதல்… “சூப்பர் ஹீரோ” மீது உயரும் எதிர்பார்ப்பு!

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, படத்தின் கதைக்களத்தை சுட்டிக்காட்டும் வகையில் மேலும் இரண்டு புதிய போஸ்டர்களை விரைவில் வெளியிட படக்குழு தயாராகியுள்ளது.

தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், தனது சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வழங்குகிறார். தரமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஷான்ஜன் ஜி இணை தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

வித்தியாசமான கதைகளையும் புதிய முயற்சிகளையும் தொடர்ந்து ஆதரித்து வரும் கே.எஸ். சினிஷ், இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். அந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகியுள்ளது.

வில்லன் கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்ததுடன், தற்போது கதாநாயகனாகவும் வெற்றிகரமாக பயணித்து வரும் அர்ஜுன் தாஸ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திறமையான நடிகை தேஜு அஷ்வினி நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். ‘லோகா – சாப்டர் ஒன்’, ‘பரிமளா & கோ’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் இணையும் காட்சிகள் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘பலூன்’ திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், கதையை கையாளும் விதம், திட்டமிடல் மற்றும் படப்பிடிப்பு அணுகுமுறையால் படக்குழுவினரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

புதிய இயக்குநர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதில் தனித்துவமான பாதையை உருவாக்கியுள்ள கே.எஸ். சினிஷ், ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் ராம்குமாரையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது அந்த வரிசையில் விக்னேஷ் வேணுகோபாலும் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது இனிமையான இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஹிஷாம், ‘சூப்பர் ஹீரோ’விற்கும் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.

முதல் பார்வைக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, விரைவில் வெளியாகவுள்ள புதிய போஸ்டர்கள் ரசிகர்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.