இந்தியா முழுவதும் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், அந்நிறுவனத்தின் நான்காவது தமிழ் திரைப்படம் இன்று சென்னையில் நடைபெற்ற எளிய பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
சென்னையில் உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற #MythriTamil04 / #DV4 படத்தின் தொடக்க விழாவில், இயக்குநர்கள் சசி, ‘ஹாய் நானா’ புகழ் சௌர்யுவ், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்டனி பாக்யராஜ் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவின் முகூர்த்த காட்சிக்கு இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இந்த திரைப்படத்தின் மூலம் கரண் அரவிந்த் குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். கதையின் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கிறார். அவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயசூர்யா படத்தொகுப்பை கவனிக்க, தேசிய விருது பெற்ற ஆக்ஷன் இயக்குநர் விக்ரம் மோர் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
முழுக்க முழுக்க கமர்ஷியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.
‘பைசன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் இந்தப் புதிய படத்தில், அவர் ரசிகர்களை கவரும் வகையில் முழுமையான மாஸ் தோற்றத்தில் களமிறங்கவுள்ளார். இதுவரை வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வந்த அவர், இந்த முறை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வணிக ரீதியிலான கதையில் நடிக்கிறார்.
அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த புதிய படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.





