வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகமும் வழிபாடும் நடைபெற்றது. தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
இந்த வழிபாட்டு நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். படத்தின் இயக்குநர் சுந்தர்.சியும் இந்த ஆன்மிக நிகழ்வில் கலந்துகொண்டார்.
திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் நடைபெற்ற இந்த வழிபாடு, படக்குழுவினரின் இறைநம்பிக்கையையும் பக்தியையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. இதன் ஒரு பகுதியாக, ஆலயத்திற்கு வந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு புடவைகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சுந்தர்.சி இயக்கத்தில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, துனியா விஜய், சுனில், கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
பக்தி, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’, தமிழ் ரசிகர்களைத் தாண்டி இந்திய அளவிலான பார்வையாளர்களையும் கவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிரத்தியங்கிரா தேவி அம்மனின் அருளால் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எதிர்காலத் திரைப்படப் படைப்புகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்றும் இந்தச் சிறப்பு வழிபாட்டின்போது படக்குழுவினர் பிரார்த்தனை செய்தனர்.





