இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டது. ஆட்டோமொபைல் உலகம், வரலாறு மற்றும் சினிமாவை ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ள இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, வழக்கமான நிகழ்ச்சிகளை விட முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக அமைந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஜி.டி. மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த அரிய விண்டேஜ் கார்கள் அணிவகுப்பாக கொண்டு வரப்பட்டன. தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கார்களில் வருகை தந்தனர். ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் சாதனைகளை நினைவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அணிவகுப்புடன், அதிநவீன சூப்பர் கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, மணிக்கு சுமார் 190 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் சூப்பர் காரில் நடிகர் ஆர். மாதவன், ஊடக பிரதிநிதிகளை கரி மோட்டார் ஸ்பீட்வேயை சுற்றி அழைத்துச் சென்றார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அனுபவம், ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் மீதான தீராத ஆர்வத்தை நினைவூட்டும் வகையில் அமைந்தது.
சூரியன் மறையும் மாலை நேரத்தில், சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு, அந்தக் காலகட்டத்தின் நுணுக்கமான மறுவடிவமைப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் ஆகியவை பார்வையாளர்களின் பலத்த கைதட்டலை பெற்றன.
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்பு திறன், விடாமுயற்சி, தேசப்பற்று மற்றும் சாதனைப் பயணத்தை டிரெய்லர் வலுவாக வெளிப்படுத்துகிறது. ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவன் தோன்றும் தோற்றம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தந்தை பெரியார் மற்றும் அடால்ஃப் ஹிட்லர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர், அதைவிட மிக முக்கியமாக தேசபக்தி கொண்டவர். பல துறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆனால், அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இந்த திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது” என்றார்.
நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்டதாவது, “பள்ளி நாட்களில் ஜி.டி. மியூசியத்திற்கு வந்திருக்கிறேன். அப்போது, பின்னாளில் ஜி.டி. நாயுடுவின் மனைவியாக திரையில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. பல தலைமுறைகள் அவரது சாதனைகளைப் பாராட்டி வருகின்றன. ஆனால், ‘ஜி.டி.என்’ திரைப்படம் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருந்த அன்பும் மனிதநேயமும் நிறைந்த மனிதரை உலகிற்கு அறிமுகப்படுத்தும்” என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு புத்தகக் கண்காட்சியில் ஜி.டி. நாயுடு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்த நாள்தான் இந்த திரைப்படத்திற்கான ஆரம்பப்புள்ளி. அவரது சாதனைகள், போராட்டங்கள், யாருக்கும் தெரியாத வாழ்க்கை அத்தியாயங்கள் என்னை ஆழமாக பாதித்தன. இப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறு பெரிய திரைக்கும் கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது” என்றார்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன், ஜி.டி. ராஜ்குமார், மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்டனர்.
‘ஜி.டி.என்’ திரைப்படத்தில் ஆர். மாதவனுடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவை அரவிந்த் கமலநாதன் மேற்கொண்டுள்ள நிலையில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிஜித் பாலா கவனித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்திற்கு பிறகு வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம், இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரின் சாதனைகளை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ளது.
உணர்வுபூர்வமான கதை, உயர்தர தொழில்நுட்பம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கதைக்களம் ஆகியவற்றால் ‘ஜி.டி.என்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.





