தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைமுறை படைப்பாளிகள் தங்களது தனித்துவமான பார்வையுடன் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநராக களமிறங்குகிறார் ராஜா கருப்பசாமி. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அவர், தனது பத்திரிகை மற்றும் ஊடகத் துறை அனுபவத்தை திரைக்கதையிலும் கதாபாத்திர உருவாக்கத்திலும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள ‘மொத ராத்திரி’, வித்தியாசமான திருமணத்தை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி நிகழும் நகைச்சுவையான மற்றும் எதிர்பாராத சம்பவங்களை சொல்லும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றிய அனுபவம், வெவ்வேறு மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் புரிந்துகொள்ள தனக்கு உதவியதாக ராஜா கருப்பசாமி தெரிவித்துள்ளார். அந்த அனுபவத்தை ‘மொத ராத்திரி’ படத்தின் கதாபாத்திரங்களிலும் காட்சிகளிலும் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது,
“எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு. மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் அறிமுக இயக்குநராக என் மீது நம்பிக்கை வைக்கும்போது அந்தப் பொறுப்பு எனக்கு இன்னும் அதிகமாகிறது. நவீன் யெர்னேனி சார் மற்றும் ஒய். ரவி சங்கர் சார் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் படைப்புச் சுதந்திரத்தையும் வழங்கினர். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றவும், அதே நேரத்தில் ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை தரக்கூடிய ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு திரைப்படத்தின் வெற்றியில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதன் நடிகர்கள் தேர்வில் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சரியான கதாபாத்திரத்திற்கு சரியான நடிகரைத் தேர்வு செய்துவிட்டால், பாதி வேலை முடிந்துவிட்டது.
ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா ஆகியோர் இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்கள். குறிப்பாக, ‘துபாய் மாப்பிள்ளை’ மற்றும் ‘அடக்கமான, அமைதியான மருமகள்’ என இரு கதாபாத்திரங்களின் முரண் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களுடன் இணைந்து மற்ற நடிகர்களின் சிறப்பான நடிப்பும் படத்திற்கு இயல்பான எனர்ஜி சேர்த்துள்ளது” என்றார்.
‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் வழக்கமான திருமணக் கதைகளிலிருந்து மாறுபட்ட ஒரு திருமணமே கதையின் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. முற்றிலும் வேறுபட்ட குணநலன்களைக் கொண்ட இருவர் திருமணத்தின் மூலம் ஒன்றிணைகின்றனர். புதிய வாழ்க்கையைத் தொடங்கும் அவர்களுக்கு எதிர்பாராத சூழ்நிலைகள் தொடர்ந்து உருவாக, அதனால் தம்பதியினர் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் சுற்றத்தினரும் பல்வேறு சிக்கல்களையும் நகைச்சுவையான சம்பவங்களையும் எதிர்கொள்கின்றனர்.
உறவுகள், குடும்பச் சூழல், நகைச்சுவை மற்றும் உணர்வுகள் ஆகியவற்றை இணைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்துள்ளார். அசோக் அர்ஜுனன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும், ஏ. பாலுமகேந்திரா கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள, ராஜா கருப்பசாமி இயக்குநராக அறிமுகமாகும் ‘மொத ராத்திரி’, வித்தியாசமான திருமணத்தை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





