“ஜி.டி.என்” கிரிஷ்குமார் ராமகுமார் இயக்கத்தில் ஆர். மாதவன், சரிதா மாதவன், விஜய் மூலன், வர்கீஸ் மூலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கோவிந்த் வசந்தா. இந்த படத்தில் ஆர். மாதவன், பிரியாமணி, ஜெயராம், சத்யராஜ், துஷாரா விஜயன், யோகி பாபு, வினய் ராய், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உலக நாடுகளால் பாராட்டப்பட்ட மாபெரும் கண்டுபிடிப்பாளரான ஜி.டி.நாயுடுவின் சாதனைப் பயணத்தையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுப் படம் தான் ‘ஜி.டி.என்’. ஒரு விஞ்ஞானியின் வெற்றிகளை மட்டுமல்லாமல், அவரது கனவுகள் எப்படி தடுக்கப்பட்டன என்பதையும் உணர்வுபூர்வமாக பதிவு செய்கிறது.
கோவையைச் சேர்ந்த கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் இளமை முதல் இறுதிக்காலம் வரை நடந்த வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார். உலகம் அங்கீகரித்த ஒரு மேதையை, சொந்த நாடே எப்படி புறக்கணித்தது என்பதையும் தைரியமாக காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
ஜி.டி.நாயுடுவாக நடித்துள்ள ஆர். மாதவன், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இளமை மற்றும் முதுமை என இரு காலகட்டங்களிலும் தோற்றம், உடல்மொழி, நடிப்பு என அனைத்திலும் சிறப்பாக வெளிப்பட்டு, ஜி.டி.நாயுடு என்றால் மாதவன் தான் நினைவுக்கு வரும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
வரித்துறை அதிகாரி அம்பலவானா கிருஷ்ணனாக நடித்துள்ள ஜெயராம், தனது வித்தியாசமான நடிப்பால் வியக்க வைக்கிறார். நேர்மையும், கடமையுணர்வும் கொண்ட அதிகாரியின் மனநிலையை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜி.டி.நாயுடுவின் நண்பராக வரும் சத்யராஜ் தனது அனுபவமிக்க நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார்.
துஷாரா விஜயன், பிரியா மணி, அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன், அந்த காலகட்டத்தை நம்பகத்தன்மையுடன் திரையில் உயிர்ப்பித்துள்ளார். குறிப்பாக ஜெர்மனி பயணம் மற்றும் ஹிட்லருடன் தொடர்புடைய காட்சிகள் தொழில்நுட்ப ரீதியாக கவனிக்க வைக்கின்றன.
கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் உணர்வுகளை மேலும் ஆழமாக்குகிறது. பின்னணி இசை எந்த இடத்திலும் தனித்து தெரியாமல் கதையோடு ஒன்றிணைந்து பயணிப்பது சிறப்பு.
படத்தொகுப்பாளர்கள் பிஜித் பாலா மற்றும் கே. சசிகுமார், வாழ்க்கை வரலாற்றுப் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தாலும், வரித்துறை சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வருவதால் சில இடங்களில் திரைக்கதை சற்று மெதுவாகிறது.
கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய அனைத்திலும் அந்த காலத்தின் சூழல் மிகுந்த நம்பகத்தன்மையுடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், ஜி.டி.நாயுடுவின் சாதனைகள் மட்டுமின்றி, அவர் சந்தித்த அரசியல் மற்றும் நிர்வாகத் தடைகளையும் எளிமையாகவும் தாக்கமுடனும் பதிவு செய்துள்ளார். இறுதிக்கட்டத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகள் விவாதத்துக்குரியதாக இருந்தாலும், தனது கொள்கையில் உறுதியாக நின்ற ஒரு மனிதனின் வாழ்க்கையை மரியாதையுடன் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
“ஜி.டி.என்” படத்திற்கு மதிப்பீடு 4/5
கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படம்





