‘சிங்கம் 2’, ‘சர்தார்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக இணையும் புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குடும்ப உணர்வுகள், வீரம் மற்றும் பொழுதுபோக்கை இணைக்கும் பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.
குடும்ப உறவுகளின் வலிமை, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் உருவாகிறது. கார்த்தியின் ரசிகர்கள் விரும்பும் குடும்ப நாயகன் தோற்றத்தை இந்தப் படம் மீண்டும் திரையில் கொண்டு வரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா, தனது திரைப்பயணத்தின் 25-வது ஆண்டை முன்னிட்டு இந்த புதிய கூட்டணியில் இணைந்துள்ளார். இதனால் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய படத்தை அறிவித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், “ஒரு புதிய பயணம் தொடங்குகிறது” என்ற வாசகத்துடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.





